இந்திய vs பாகிஸ்தான் போட்டி; மருத்துவமனை படுக்கையை புக் செய்யும் ரசிகர்கள்!

Updated: Fri, Jul 21 2023 13:38 IST
Image Source: Google

எதிர்வரும் அக்டோபர் 15ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ளன. இந்நிலையில், அந்த நகரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் போட்டி நடைபெற உள்ள தேதியை ஒட்டி படுக்கை முன்பதிவு செய்ய ரசிகர்கள் மும்முரம் காட்டி வருவதாக தகவல். அதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெறும் நாளில் அகமதாபாத்தில் உள்ள ஓட்டல்களின் கட்டணங்கள் சுமார் 10 மடங்கு உயர்ந்துள்ளன. சாதாரண நாட்களில் அகமதாபாத்தில் உள்ள ஓட்டல்களில் ஒருநாள் தங்குவதற்கான அறை வாடகை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை இருக்கும். இது தற்போது ரூ.40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரு சில ஓட்டல்களில் ரூ.1 லட்சம் வரை கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

ஓட்டல் முன்பதிவு இணையதளங்களின் படி, தற்போது டீலக்ஸ் அறை ஒன்றின் வாடகை ரூ.5,699 ஆகும். ஆனால், அதே ஹோட்டலில் அக்டோபர் 15ஆம் தேதி ஒரு நாள் தங்க விரும்பினால் ரூ.71,999 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டி நடைபெறும் நாட்களில் அங்குள்ள நட்சத்திர விடுதிகள் காலியாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதை சமாளிக்கும் வகையில் கிரிக்கெட் ரசிகர்கள், நரேந்திர மோடி மைதானத்தை ஒட்டி அமைந்துள்ள தனியார் மருத்துவமனைகளில் ஒருநாள் தங்குவதற்கான படுக்கை கட்டணம் குறித்து விசாரித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக முழு உடல் பரிசோதனை பேக்கேஜ் வைத்துள்ள மருத்துவமனைகளில் 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை தங்குவதற்கான கட்டணம் குறித்து கேட்கப்படுகிறதாம். மருத்துவமனையில் நோயாளியுடன் உதவியாளர் ஒருவரும் தங்கலாம் என்பதும் குற்ப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை