அடுத்த போட்டியிலும் இதே போன்ற சிறப்பான ஆட்டத்தை தொடர்வோம் - பாட் கம்மின்ஸ்!

Updated: Sat, Oct 28 2023 19:42 IST
அடுத்த போட்டியிலும் இதே போன்ற சிறப்பான ஆட்டத்தை தொடர்வோம் - பாட் கம்மின்ஸ்! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 27ஆவது லீக் போட்டியானது இன்று தர்மசாலா நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தினர். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர்கள் டேவிட் வார்னர் 81 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 109 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 389 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் ரச்சின் ரவீந்திராவின் மிகச் சிறப்பான ஆட்டம் காரணமாக முன்னேறி வந்தது. அவரோடு டேரல் மிட்சல், டாம் லேதம், ஜிம்மி நீஷம் என அனைவருமே கை கொடுக்க இறுதி கட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றியை நோக்கி நகர்ந்தாலும் கடைசி நேரத்தில் ஆஸ்திரேலிய அணி அவர்களை மிகச் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்தது.

இறுதிவரை போராடிய நியூசிலாந்து அணியானது 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 383 ரன்களை குவிக்க ஆஸ்திரேலியா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் ரச்சின் ரவீந்தரா 89 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 116 ரன்கள் குவித்து அசத்தினார். ஆஸ்திரேலிய அணி சார்பாக பந்துவீச்சில் ஆடம் ஸாம்பா 3 விக்கெட்களையும், ஹசில்வுட் மற்றும் கம்மின்ஸ் ஆகிய இருவரும் தலா இரண்டு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி இந்த தொடரில் தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், “இந்தப் போட்டி மிகவும் அற்புதமாக இருந்தது. நியூசிலாந்து அணி வீரர்கள் பெரிய இலக்கை துரத்தினாலும் சிறப்பாகவே எங்களை துரத்தி வந்தார்கள்.

ஆனாலும் இறுதியில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். டிராவிஸ் ஹெட் ஐந்து வாரங்களாக எங்களது அணியில் விளையாமல் இருந்தார். தற்போது காயத்திலிருந்து மீண்ட அவர் மீண்டும் போட்டிக்கு திரும்பி இப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது அணியின் தொடக்க வீரர்கள் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை பின்பற்றியே நாங்களும் பெரிய ரன் குவிப்பை நோக்கி நகர்ந்தோம். இந்த மைதானம் பேட்டிங்கிற்கு பெரிய அளவில் சாதகமாக இருக்கிறது.

இந்த போட்டியின் வெற்றிக்கு பீல்டிங் தான் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நாங்கள் பீல்டிங்கில் சரியாக செயல்பட்டதாலயே எங்களால் அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்து வெற்றி பெற முடிந்ததாக கருதுகிறேன். இந்த வெற்றிக்கு பிறகு ஐந்து நாட்கள் எங்களுக்கு ஓய்வு இருக்கிறது. எனவே தற்போதைக்கு இந்த வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடிவிட்டு அதன் பிறகு அடுத்த போட்டியிலும் இதே போன்ற சிறப்பான ஆட்டத்தை தொடர்வோம்” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை