ஐபிஎல் தொடரில் விளையாடுவதே என்னுடைய இலக்கு - ‘யார்க்கர் கிங்’ நடராஜன்
கடந்தாண்டு ஐபிஎல் மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் தங்கராசு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். அதிலும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட நடராஜன் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்து வகையிலான கிரிக்கெட்டிலும் தனது கால் தடத்தைப் பதித்தார்.
அதன்பின்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய நடராஜன் கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டார். இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அவர் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். இப்போது பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் மருத்துவர்களின் கண்காணிப்பில் மெல்ல தன்னுடைய பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் நடராஜன்.
இந்நிலையில், அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வந்துள்ள நடராஜன், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடுவதே தன்னுடைய இலக்கு என தேரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய நடராஜன் "அறுவைச் சிகிச்சைக்கு பின் நான் நலமாகவே இருக்கிறேன். என்னுடைய பயிற்சியை மெல்ல ஆரம்பித்து இருக்கிறேன். இம்மாத இறுதியில் வலைப்பயிற்சியில் ஈடுபடுவேன். அப்போது பவுலிங் பயிற்சியை மேற்கொள்ள இருக்கிறேன். இப்போதைக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதே என்னுடைய நோக்கமாக இருக்கிறது. அதற்குள்ளாக முழுவதும் தயாராகிவிடுவதே என்னுடைய இப்போதைய முயற்சியாகும்.
ஐபிஎல்லில் இருந்து விலகியபோது நான் மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால் ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டது எனக்கு நன்மையாகவே அமைந்தது. டி20 உலகக்கோப்பையில் நான் விளையாடுவேனா எனத் தெரியவில்லை. இப்போதைக்கு முழுவதுமாக குணமான பின்னர் ஐபிஎல்லில் விளையாட வேண்டும். ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடினால் நிச்சயம் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு தேர்வாவேன் என நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.