பென் ஸ்டோக்ஸின் கம்பேக்கை விமர்சித்த டிம் பெயின்!

Updated: Sat, Aug 19 2023 20:53 IST
பென் ஸ்டோக்ஸின் கம்பேக்கை விமர்சித்த டிம் பெயின்! (Image Source: Google)

ஐசிசியின் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடருக்கு தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுக் கொண்டு இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் திரும்ப வந்திருக்கிறார். கடந்த வருடம் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

நிறைய போட்டிகளில் சர்வதேச வீரர்கள் விளையாட வேண்டி இருக்கின்ற காரணத்தினால் தன்னுடைய உடல் அதற்கு ஏற்ற வகையில் ஒத்துழைக்கவில்லை என்றும், அதனால் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் இரண்டை மட்டுமே தான் விளையாட விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பென் ஸ்டோக்சை இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு இங்கிலாந்து அணிக்கு திரும்ப வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

இதைப் பரிசீலனை செய்த பென் ஸ்டோக்ஸ் இறுதியாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை ஏற்று அணிக்கு திரும்பி இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்பாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து அணி விளையாட இருக்கிறது. இந்தத் தொடருக்கு பென் ஸ்டோக்ஸ் பெயர் இங்கிலாந்து அணியில் இடம் பெற்றதின் மூலமாக அவரது மறுவருகை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

அதே சமயத்தில் இவர் ஒருநாள் கிரிக்கெட் இங்கிலாந்து அணியில் இடம் பெற்ற காரணத்தினால், வளர்ந்து வரும் நட்சத்திர இளம் பேட்ஸ்மேன் ஹாரி புரூக்குக்கு இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் மறுக்கப்பட்டிருக்கிறது. அவர் இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியில் தொடர்ச்சியாக இடம்பெற்று பென் ஸ்டோக்ஸ் இடத்தில் விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பெசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின், “பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட் ஓய்வில் இருந்து மீண்டும் திரும்ப வருகிறார் என்ற செய்தி கேள்விப்பட்டேன். அது மிகவும் சுவாரசியமான ஒன்றாக இருக்கிறது. அது, நான்தான் தேர்வு செய்வேன் எங்கு விளையாட வேண்டும் எப்போது விளையாட வேண்டும் என்பதைப் போல இருந்தது. ‘12 மாதம் அணிக்காக விளையாடிய தோழர்களே நன்றி! மன்னிக்கவும்! நான் இப்பொழுது திரும்ப வந்து விட்டேன் நீங்கள் எனக்காக போய் பெஞ்சில் அமர்ந்து கொள்ளுங்கள்’ என்பது போல இருக்கிறது” என்று நகைச்சுவையாக கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை