மீண்டும் மும்பை இந்தியன்ஸில் இணையும் அம்பத்தி ராயுடு!

Updated: Mon, Jan 08 2024 11:05 IST
Image Source: Google

ஆந்திராவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு தன்னுடைய ஐபிஎல் பயணத்தை மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடங்கினார். இதன் காரணமாக இந்தியாவுக்காகவும் அறிமுகமான அவர் ஆரம்பத்தில் சுமாராக செயல்பட்டதால் மீண்டும் வாய்ப்பு வரவில்லை. அதைத் தொடர்ந்து 2018 சீசனில் சென்னை அணிக்காக  அபாரமாக செயல்பட்ட அவர் மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுத்து 2019 உலகக்கோப்பையில் விளையாட தகுதியானவராக தயாராக இருந்தார்.

இருப்பினும் கடைசி நேரத்தில் விஜய் சங்கரை தேர்வு செய்து தம்மை கழற்றி விட்டதால் ஏமாற்றமடைந்த ராயுடு 33 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அதிரடியான முடிவை எடுத்தார். அதன் பின் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வந்த அவர் 2023 சீசனில் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி சென்னை 5ஆவது கோப்பையை வெல்வதற்கு உதவி ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் ஓய்வுக்கு பின் அடுத்ததாக தன்னுடைய பயணத்தை அரசியலில் கடந்த வாரம் ராயுடு தொடங்கினார். குறிப்பாக முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான கட்சியில் இணைந்த அவர் இனிமேல் அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணி நிர்வகிக்கும் எம்ஐ எமிரேட்ஸ் அணிக்காக விளையாட உள்ளதாக ராயுடு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த வருடம் முதல் முறையாக தொடங்கப்பட்ட ஐஎல் டி20 எனப்படும் அந்த தொடரின் 2ஆவது சீசன் வரும் ஜனவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. அந்தத் தொடரில் எம்ஐ எமிரேட்ஸ் அணிக்காக விளையாட ராயுடு தற்போது அறிவித்துள்ளார். கடந்த 2009 – 2017 வரையிலான காலகட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ராயுடு விக்கெட் கீப்பராக விளையாடினார். அந்த வகையில் சென்னைக்காக விளையாடி ஓய்வு பெற்ற அவர் தற்போது எம்ஐ அணிக்காக துபாயில் விளையாட உள்ளது மும்பை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. 

ஆனால் அதன் காரணமாக அரசியலில் இப்போது கவனம் செலுத்த முடியாது என்பதால் கட்சியிலிருந்து விலகுவதாகவும் ராயுடு ட்விட்டரில் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது பற்றி தன்னுடைய ட்விட்டரில் அவர், “ஒய்எஸ்ஆர்சிபி கட்சியில் இருந்து நான் விலகுகிறேன். அதனால் அரசியல் இருந்து சிறிது காலம் நான் ஒதுங்கி இருக்கிறேன் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். அடுத்த நடவடிக்கை குறித்து உரிய நேரத்தில் தெரிவிப்பேன்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை