மீண்டும் ஓரங்கட்டப்பட்ட அஸ்வின்; கோலியை கடுமையாக சாடும் விமசகர்கள்!

Updated: Thu, Sep 02 2021 18:04 IST
Image Source: Google

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என கணக்கில் தொடரில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் இஷாந்த் சர்மா, ஷமிக்குப் பதிலாக உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர் இடம்பெற்றுள்ளார்கள். இந்த டெஸ்டிலும் அஸ்வினுக்கு இடம் கிடைக்கவில்லை. 

மேலும் டாஸ் நிகழ்வின்போது அஸ்வினைத் தேர்வு செய்யாதது பற்றி கோலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, “இங்கிலாந்து அணியில் நான்கு இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளார்கள். எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் ஓவர் தி விக்கெட்டிலிருந்து பந்துவீசுவதால் அது ஜடேஜாவின் பந்துவீச்சுக்குப் பொருத்தமாக இருக்கும்” என்றார். 

வழக்கமாக ஓர் அணியில் இடது கை பேட்ஸ்மேன்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் ஆஃப் ஸ்பின்னர்களைச் சேர்ப்பார்கள். இடது கை சுழற்பந்து வீச்சாளர்களைத் தவிர்ப்பார்கள். ஆனால் இதற்கு நேர்மாறாக கோலி விளக்கம் அளித்துள்ளது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. 

இந்நிலையில் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஓவல் மைதானத்திலும் அஸ்வின் தேர்வு செய்யப்படாததால் அதிக விமர்சனத்துக்கு இந்திய கேப்டன் விராட் கோலி ஆளாகியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் சிறப்பாகப் பந்துவீசிய அஸ்வின், இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றார். 

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இருந்தும் இங்கிலாந்தில் தொடர்ந்து நான்கு டெஸ்டுகளில் தேர்வு செய்யாததைக் கண்டு பலரும் ஏமாற்றமடைந்துள்ளார்கள். கோலி தவறான முடிவை எடுத்துள்ளார், அஸ்வினை இன்னும் மரியாதையாக நடத்தவேண்டும் என ரசிகர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் முன்னாள் வீரர்களும் அஸ்வினுக்கு ஆதரவாகச் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதிவருகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை