ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பிடித்த மகேந்திர சிங் தோனி!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம்பிடித்துள்ளார். இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மற்றொரு சாதனையாக பார்க்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த விளங்கிய வீரர் வீராங்கனைகள் ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பிடிப்பது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டிற்கான ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பிடித்த வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்கள் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த கேப்டன்களில் ஒருவருமான எம் எஸ் தோனி ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பிடித்த 11ஆவது இந்திய வீரர் எனும் பெருமையையும் மகேந்திர சிங் தோனி பெற்றுள்ளார். இதற்கு முன் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், டயானா எடுல்ஜி, அனில் கும்ப்ளே, பிஷன் சிங் பேடி, கபில் தேவ், ராகுல் டிராவிட், வினு மங்காட் மற்றும் நீது டேவிட் உள்ளிட்டோர் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமில் றிவிக்கப்பட்ட 7 பேரில் 5 ஆடவர், 2 மகளிர் அடங்குவர். அந்தவகை இந்தப் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் கிரேம் ஸ்மித், ஹாசிம் ஆம்லா, நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் ஆகியோருடன், மகளிர் பிரிவில் இங்கிலாந்தின் சாரா டெய்லர் மற்றும் பாகிஸ்தானின் சனா மிர் ஆகியோரும் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைந்துள்ளனர்.
Also Read: LIVE Cricket Score
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றது குறித்து பேசிய எம்எஸ் தோனி, “உலகெங்கிலும் உள்ள பல்வேறு தலைமுறை கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் பெயரிடப்பட்டது ஒரு மரியாதை. இதுபோன்ற எல்லா காலத்திலும் சிறந்த வீரர்களுடன் உங்கள் பெயரை நினைவில் வைத்திருப்பது ஒரு அற்புதமான உணர்வு. இந்த சிறப்பான தருணத்தை நினைத்து நான் எப்போதும் மகிழ்ச்சியடைவேன்” என்று தெரிவித்துள்ளார்.