கம்பீருடனான மோதல் குறித்து மனம் திறந்த காம்ரன் அக்மல்!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான கம்ரான் அக்மல், போட்டியின்போது ஆக்ரோஷமாக விளையாடக் கூடியவர். கடந்த 2010 ஆசிய கோப்பை போட்டியின் நடுவே இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான கவுதம் கம்பீருக்கும் இவருக்கும் இடையே அனல் பறந்த வாக்குவாதம் நடைபெற்றது.
இந்த நிகழ்வை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது. தற்போது இதுகுறித்து நினைவுகூர்ந்த கம்ரான் அக்மல், இருவருக்கும் இடையே எந்த போட்டியும் இல்லை சொல்லபோனால் அன்றைய வாக்குவாதம் தவறான புரிதலின் காரணமாகவே நடைபெற்றது எனக் கூறியுள்ளார்.
உங்களுக்கு மிக பெரி்ய அளவில் போட்டியாளராக இருந்தவர் கவுதம் கம்பீரா அல்லது ஹர்பஜன் சிங்கா என கேள்வி எழுப்பியதற்கு, "இருவருக்குள்ளும் எந்தப் போட்டியும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. தவறான புரிதலால் அது நடந்தது. ஆசிய கோப்பையில் கவுதமுடன் எனக்கு தவறான புரிதல் இருந்தது.
அவர் ஒரு நல்ல மனிதர் மற்றும் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். இளையோருக்கான போட்டியில் இணைந்து விளையாடியுள்ளோம். எனவே, போட்டி இல்லை. உண்மையாக, எதுவும் இல்லை" என்றார்.
அந்த போட்டியில், இந்தியா அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக கம்பீர் 83 ரன்களை எடுத்திருந்தார்.