டிராவிட்டின் ஆலோசனையை பெற ஆவலுடன் உள்ளேன் - ருதுராஜ் கெய்க்வாட்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் அடுத்த மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கவுள்ளார்.
இந்நிலையில், இலங்கை தொடரின் போது பயிற்சியாளர் டிராவிட்டின் ஆலோசனைகளை பெற ஆவலுடன் உள்ளதாக கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கெய்க்வாட், "இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட நாளன்று நான் வழக்கம் போல் தூங்குவதற்கு சென்றேன். அப்போது சிலர் எனக்கு தொடர்ச்சியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். ஆனால் நான் முதலில் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதன்பின் இரண்டு பத்திரிக்கையாளர்கள் என்னை தொடர்பு கொண்டு, நான் இந்திய அணியில் தேர்வான செய்தியை தெரிவித்தனர்.
நான் உடனே எனது பெற்றொரை எழுப்பி இத்தகவலை சொன்னேன். ஆனால் அவர்கள் நல்ல தூக்கத்தில் இருந்ததால் நான் செல்வதை அவர்கள் சரியாக கேட்கவில்லை. பிறகு காலையில் அவர்கள் எழுந்ததும் நான் அணிக்கு தேர்வாக தகவலறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். மேலும் எனது வீட்டருகேவுள்ளவர்களும் இதனை கொண்டாட ஆரம்பித்ததைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன்.
இருப்பினும் எனது தேர்வு குறித்து நான் அதிகம் யோசிக்கவில்லை. இப்போது கூட, 'நான் பிளேயிங் லெவனில் விளையாடுவேன்' என யோசிக்கவில்லை. எனக்கு கிடைக்கும் வாய்ப்பை நான் நன்றாக பயன்படுத்தி கொள்ளமட்டுமே விரும்புகிறேன்.
மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்திய அண்டர் 19 அணியின் ஒரு பகுதியாக இருந்தபோது எங்கள் பயிற்சியாளராக இருந்த ராகுல் திராவிடின் கீழ் ஒரு மாதம் பயிற்சி பெற்றது மிகவும் பயணாக இருந்தது. அவர் மூன்று சுற்றுப்பயணங்களில் எங்களுடன் இருந்தார், நாங்கள் ஒருவருக்கொருவர் பழக ஆரம்பித்தோம். ஆனால் அதன்பின் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராக நியமிக்கப்பட்டபோது, அவரது ஆலோசனைகளை இனி பெறமுடியாது என தனிப்பட்ட முறையில் நான் ஏமாற்றமடைந்தேன். ஆனால் இப்போது, அவரது பயிற்சின் கீழ் விளையாடவுள்ளதை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடருக்கான ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி வரும் ஜூன் 14ஆம் தேதி முதல் மும்பையிலுள்ள பிசிசிஐ விடுதியில் தனிமைப்படுத்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.