விஜய் ஹசாரே கோப்பை: ருதுராஜ் கெய்க்வாட், ஹங்கரேக்கர் சிறப்பு; அரையிறுதியில் மகாராஷ்டிரா!

Updated: Mon, Nov 28 2022 19:26 IST
Image Source: Google

இந்தியாவின் உள்ளூர் புகழ்பெற்ற ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடரின் லீக் சுற்றுகள் அனைத்தும் முடிந்து தற்போது காலிறுதி சுற்றுகள் தொடங்கிவிட்டன. காலிறுதி சுற்றின் ஒரு ஆட்டத்தில் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற உத்தரபிரதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி இப்போட்டியில் முதலில் களமிறங்கிய மகாராஷ்டிரா அணியில் தொடக்க வீரர் ராகுல் திரிபாதி 9, பச்சவ் 11, பவ்னே 37, அஸிம் காஜை 37 ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தனர்.

இருப்பினும், மறுபக்கம் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வந்தார். அரை சதத்தை 71 பந்துகளில் கடந்த அவர், 109ஆவது பந்தில் சதம் அடித்தார். அடுத்து அதிரடி காட்ட ஆரம்பித்த அவர் 138 பந்திகளில் 150 ரன்களையும், 153 பந்திகளில் இரட்டை சதத்தையும் பூர்த்தி செய்தார்.

குறிப்பாக, ஸ்பின்னர் சிவா சிங் வீசிய ஆட்டத்தின் 49ஆவது ஓவரில் ருதுராஜ் முதல் 4 பந்துகளில் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். தொடர்ந்து 5ஆவது பந்தை சிவா சிங் நோ பாலாக வீசிய போதும் அதனையும் ருதுராஜ் சிக்ஸர் அடித்தார். அடுத்து, கடைசி இரண்டு பந்திலும் சிக்ஸர் அடித்து, ஒரு ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.

இறுதியில் 159 பந்துகளில் 10 பவுண்டரி, 16 சிக்ஸர்கள் உட்பட 220 ரன்களை குவித்து ருதுராஜ் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், மகாராஷ்டிரா அணி 330/5 ரன்களை குவித்து அசத்தியது. உத்திரபிரதேச அணி தரப்பில் கார்த்திக் தியாகி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து இலக்கை துரத்திக் களமிறங்கிய உத்தரபிரதேச அணியின் தொடக்க வீரர் மாதவ் கௌசிக் 10 ரன்னிலும், பிரியம் கார்க் 22 ரன்களிலும், கரன் சர்மா 13 ரன்களிலும், ரிங்கு சிங் 11 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆனாலும் மற்றொரு தொடக்க வீரரான ஆர்யன் ஜூயல் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தியதுடன், 143 பந்துகளில் 159 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பின் ஏமாற்றமடைத்தனர். 

இதனால் 47.4 ஓவர்களில் உத்திரபிரதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 272 ரன்களை மட்டுமே எடுத்தது. மகாராஷ்டிரா அணி தரப்பில் ராஜ்வர்த்தன் ஹங்கரேக்கர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை