பூரணின் கடந்த ஐபிஎல் தொடர் பற்றி கவலையில்லை - கவுதம் கம்பீர்!

Updated: Sat, Dec 24 2022 12:53 IST
Image Source: Google

ஐபிஎல் 16ஆவது சீசன் மினி ஏலமானது கொச்சியில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்தும் 405 இறுதிக்கட்ட ஏலப் பட்டியலில் இடம்பெற்றனர். அதில் 273 இந்திய வீரர்களும், 132 வெளிநாட்டு வீரர்களும் இருந்தனர். இவர்களில் இருந்து அதிகபட்சமாக 30 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 82 வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.

இந்த நிலையில் இங்கிலாந்து இளம் வீரர் சாம் கரணுக்கு ரூ. 18.50 கோடி, ஆஸ்திரேலியா ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீனுக்கு ரூ.17.50 கோடி, பென் ஸ்டோக்ஸ்-க்கு ரூ.16.25 கோடி என முக்கிய அணிகளால் பெரிய தொகை கொடுக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிக்கோலஸ் பூரண் ரூ.16 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார். இந்திய ஆடுகளங்களில் பெரிய அளவில் விளையாடாத பூரணுக்கு, இவ்வளவு பெரிய தொகை எதற்காக லக்னோ அணி செலவழித்தது என்று ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.

இதுகுறித்து லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறுகையில், “வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரணின் கடந்த கால ஐபிஎல் போட்டிகள் பற்றி கவலையில்லை. அவர் லக்னோ அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. வரும் சீசனில் பூரணின் முழுத்திறமையும் நிச்சயம் வெளிப்படும். பூரணின் திறமையை மீதான நம்பிக்கையால் மட்டுமே இவ்வளவு பெரிய தொகையை கொடுத்துள்ளோம்.

ஏனென்றால் ஒவ்வொரு வீரரும் 26 வயதிற்கு பின்னரே உச்சக்கட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். அதேபோல் பூரண் எத்தனை ரன்கள் சேர்க்கிறார் என்பது முக்கியமில்லை. அவர் எந்த மாதிரியான அட்டாக்கை வெளிப்படுத்துவார் என்பதே முக்கியம். நிக்கோலஸ் பூரணால் லக்னோ அணிக்கு 3 முதல் 4 போட்டிகளை வென்று கொடுக்க முடியும்.

அவரால் டாப் ஆர்டரிலும் விளையாட முடியும். அதேபோல் 6 அல்லது 7வது இடத்திலும் விளையாட முடியும். அனைவருக்கும் அனைத்து பொசிஷன்களிலும் விளையாடும் திறன் இருக்காது. நிக்கோலஸ் பூரணுக்கு அந்த திறமை இருக்கிறது. அதேபோல் டீ காக்கிற்கு காயம் ஏற்பட்டால், நிக்கோலஸ் பூரணால் பேக் அப் விக்கெட் கீப்பராக செயல்பட முடியும். பூரணுக்கு கொடுத்த தொகை அதிகம் என்று நினைப்பார்கள். ஆனால் உனாத்கட், டேனியல் சாம்ஸ் மற்றும் ரொமாரியோ ஷெஃபர்ட் ஆகியோரை அடிப்படை தொகைக்கு வாங்கி இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை