வைரலான சர்ச்சை காணொளி; விளக்கமளித்த கம்பீர்!

Updated: Mon, Sep 04 2023 22:01 IST
வைரலான சர்ச்சை காணொளி; விளக்கமளித்த கம்பீர்! (Image Source: Google)

இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் செல்லும் இடமெல்லாம்ல் சர்ச்சைகள் உருவாகி வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பின் தோனி மீது ஏராளமான முறை வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளார் கம்பீர். குறிப்பாக 2011 உலகக்கோப்பை வெற்றியை பற்றி பேசும் போதெல்லாம் தோனியின் நாயக பிம்பத்தை காட்டமாக விமர்சிப்பார். இதனிடையே அண்மையில் ஐபிஎல் தொடரின் போது விராட் கோலியுடன் மோதலில் ஈடுபட்டார் கம்பீர்.

இதனால் ஐபிஎல் தொடரின் போது லக்னோ அணி விளையாடிய் இடங்களிலெல்லாம் விராட் கோலி என்ற கோஷம் எழுந்தது. இதனால் கவுதம் கம்பீர் கோபமடைந்து ரசிகர்களையும் குற்றம் சாட்ட தொடங்கினார். கௌதம் கம்பீரின் கோபமே அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக எதிரியாக மாறி வந்தது. அண்மையில் கூட பாகிஸ்தான் அணியினருடன் இந்திய வீரர்கள் நட்புடன் இருக்கக் கூடாது என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தின் போது கவுதம் கம்பீர் வர்ணனையாளராக பணியாற்றினார். அப்போது கம்பீர் தனது செல்போனில் பேசிக் கொண்டு மைதானத்தில் இருந்து வெளியேறிய போது, திடீரென அவரை நோக்கி ரசிகர்கள் பலரும் விராட் கோலி மற்றும் தோனி ஆகியோரின் பெயர்களை கொண்டு ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் கோபமடைந்த கம்பீர் ரசிகர்களை நோக்கி, நடுவிரலை காட்டி சென்றார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்நிலையில் அக்காணொளி குறித்து கவுதம் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அந்த பகுதியில் பாகிஸ்தான் ரசிகர்கள் அதிகமாக இருந்தனர். அவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். காஷ்மீர் குறித்தும் கோஷம் எழுப்பினார்கள். ஒரு இந்தியனாக என் நாட்டை பற்றி யார் தவறாக பேசினாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. சோசியல் மீடியாவில் பார்ப்பதெல்லாம் முழுமையான செய்தியை சொல்லாது. அதில் வரும் கோஷங்கள் எடிட் செய்யப்பட்டவை” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை