ஹர்திக் பாண்டியாவுக்கு ஏற்ற சரியான மாற்று வீரர் இவர்தான் - கௌதம் கம்பீர்!

Updated: Wed, Aug 23 2023 15:17 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உலக கோப்பைக்கு முன்பு மிகவும் அதிகம் எதிர்பார்த்து இருந்த ஒரு விஷயம் ஆசிய கோப்பைக்கு அறிவிக்கப்படும் இந்திய அணி எதுவாக இருக்கும் என்பதுதான். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்திய தேர்வு குழு ஆசியக் கோப்பைக்கு 17 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்து வெளியிட்டது. இந்த அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா, துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா தொடர்கிறார்கள்.

இந்த அணியில் சாஹல் நீக்கப்பட்டது, சஞ்சு சாம்சன் பேக் அப் வீரராக வைக்கப்பட்டது, ஆப் ஸ்பின்னர் யாரையும் தேர்வு செய்யாதது என மூன்று விஷயங்களும் பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தன. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கவுதம் கம்பீர் இதில் இல்லாத ஒரு புதிய விஷயத்தை கொண்டு வந்து தனது விமர்சனத்தை முன்வைத்து இருக்கிறார்.

என்னவென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 17 பேர் கொண்ட அணியில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா இருக்கிறார். அவருக்கு மாற்றாகவும் அதே சமயத்தில் எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்வதற்காக விளையாடும் அணியில் இடம் பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கின்ற வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சர்துல் தாக்கூர் இருக்கிறார்கள்.

தற்பொழுது இதை முன்வைத்து கவுதம் கம்பீர் தன்னுடைய விமர்சனத்தை எழுப்பி இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக சர்துல் தாக்கூர் இருக்க முடியாது என்று கூறியுள்ள அவர் அதற்கு பதிலாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள மற்றும் அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வரும் சிவம் துபேவை தேர்ந்தெடுத்து இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், “தேர்வாளர்கள் நிச்சயமாக கவனத்தில் வைத்திருக்க வேண்டிய ஒரு பெயர் சிவம் துபே. அவர் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். உங்களுக்கு ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக ஒரு வீரர் தேவை. அவர் நிச்சயமாக சர்துல் தாக்கூர் கிடையாது. சிவம் துபேதான் அதற்கு சரியான வீரர். தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஒரு ஒழுக்கமான அணி. 

ஆனால் இந்திய நிலைமைகளில் விளையாடுகின்ற காரணத்தினால் மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர்களான ரவி பிஷ்னோய் இல்லை சஹால் யாராவது ஒருவர் அணியில் இருந்திருக்க வேண்டும். இந்திய நிலைமைகளில் பெரிய தொடருக்கு நிச்சயம் அணியில் இரண்டு மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர்கள் கட்டாயம் தேவை” என்று கூறியிருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை