தோனிக்கும் எனக்கும் மோதலா? - கம்பீர் ஓபன் டாக்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர். இவர் 2003ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆனார். முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 2004இல் அணியில் அறிமுகம் செய்யப்பட்டார். ஆரம்பக்காலத்தில் இருவரும் சக வீரர்களாக இருந்தனர்.
ஆனால் கம்பீருக்கு பிறகு அறிமுகமான தோனி அணியின் கேப்டன் ஆனார். அவரது கேப்டன்சியின் கீழ் பல ஆண்டுகள் விளையாடி வந்தார் கம்பீர். இதனிடையே கம்பீருக்கும் தோனிக்கும் ஆகாது என்றொரு பொதுவான பார்வை விமர்சகர்களிடையே உள்ளது.
அதற்கு காரணம், தோனி, கம்பீரை இந்திய அணியை விட்டு நீக்கினார் என்ற ஒரு தகவலும், கம்பீர் ஓய்வுக்குப் பின் தொடர்ந்து தோனியை கடுமையாக விமர்சித்து வருவதும் தான்.
இந்நிலையில் தோனி மீது பரஸ்பர மரியாதை வைத்திருப்பதாகவும், தோனிக்கு அடுத்தபடியாக நிற்பவர் அவர்தான் என்றும் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
இதுகுறித்து கம்பீர் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், ''கம்பீருக்கு தோனியை பிடிக்கவில்லை என்று கூறுவதெல்லாம் அபத்தம். தோனி மீது எனக்கு பரஸ்பர மரியாதை உண்டு. அது எப்போதும் நிலைத்திருக்கும். 138 கோடி மக்கள் முன்னிலையில் எங்கு வேண்டுமானாலும் இதை நான் சொல்ல முடியும். இது அவருக்கு ஒருபோதும் தேவை இல்லை என்று நான் நம்புகிறேன்.
இந்திய கிரிக்கெட்டுக்காகவும், ஒரு மனிதனாகவும் செய்தவற்றிற்கு தோனிக்கு அடுத்தபடியாக நான் நிச்சயம் நிற்பேன். நீங்கள் விளையாட்டை வேறு விதமாகப் பார்க்கலாம், நான் வேறு விதமாகப் பார்க்கலாம்.
எனக்கு எனது சொந்த கருத்துக்கள் உள்ளன, அதுபோல் தோனிக்கும் சொந்த கருத்துக்கள் உண்டு. அவர் கேப்டனாக இருந்தபோது நான் நீண்ட காலமாக துணை கேப்டனாக இருந்தேன். நாங்கள் இந்திய அணிக்காக விளையாடியபோதும், ஒத்த கருத்துக்களுடனே இருந்தோம்'' என்று தெரிவித்துள்ளார்.