ஐபிஎல்: கோலியுடனான மோதம் குறித்து மனம் திறந்த கம்பீர்!

Updated: Sat, Mar 19 2022 16:45 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல்லில் 14 சீசன்கள் இதுவரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 4 முறையும், கம்பீர் தலைமையிலான கேகேஆர் அணி 2 முறையும் கோப்பையை வென்றுள்ளன. 

ஆனால் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. ரோஹித், தோனி ஆகிய இருவரும் அமைதியான நிதானமான கேப்டன்கள். ஆனால் கம்பீரும் கோலியும் ஆக்ரோஷமான கேப்டன்கள். 

இருவருமே பதிலடி கொடுப்பதில் ஒரே மாதிரியான கேரக்டரை கொண்ட வீரர்கள். விட்டுக்கொடுக்காத ஆக்ரோஷமான குணாதிசயம் கொண்ட அவர்கள் இருவருக்கும் இடையே ஐபிஎல்லில் ஒருமுறை மோதல் ஏற்பட்டது. 2013 ஐபிஎல்லில் பெங்களூருவில் நடந்த ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இருவரும் மோதிக்கொண்டதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

ஐபிஎல்லில் இந்திய வீரர்களுக்கு இடையேயான மிக பிரபலமான மோதல் அது. ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த்தை அறைந்த சம்பவத்திற்கு பின்னர், ஐபிஎல்லில் இரு இந்திய வீரர்கள் கடுமையாக மோதிக்கொண்டது அந்த சம்பவம் தான். 

இரு ஆக்ரோஷமான வீரர்களுக்கு இடையே இதுபோன்ற மோதல் ஏற்படுவது இயல்பு தான். இருவருமே தங்கள் அணிக்காக சிறப்பாக ஆட வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையும் வேட்கையும் கொண்டவர்கள். போட்டியின் விறுவிறுப்பான கட்டத்தில், சூடான சில சம்பவங்கள் நடப்பது இயல்புதான். அப்படியானதுதான் அந்த மோதலும்.  அதன்பின்னர் அவர்கள் இருவரும் அந்த மாதிரி மோதியதில்லை.

ஐபிஎல் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அந்த மோதல் சம்பவம் குறித்து, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கும் கௌதம் கம்பீர் மனம் திறந்துள்ளார்.

அதுகுறித்து பேசிய கௌதம் கம்பீர், “கோலியுடனான அந்த மோதல் பெரிய விஷயம் அல்ல. அவர் அப்படி இருக்கவேண்டும் என்றுதான் நான் விரும்புவேன். நானும் அப்படித்தான். தோனி ஒருவிதமான போட்டி உணர்வு கொண்டவர். கோலி வேறு மாதிரியானவர். அணியை வழிநடத்தும்போது ஒரு கேப்டனாக சில சமயங்களில் அப்படி நடந்துகொண்டுதான் ஆகவேண்டும். அப்படி நடந்துகொள்ள விரும்பவில்லை என்றாலும், அப்படி நடந்துகொள்ள நேரிடும். அணியின் கேப்டனாக இருப்பதாலேயே, ஒரு வீரருடனான தனிப்பட்ட பழக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது.

விராட் கோலியுடன் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்னையும் இல்லை. அதை நான் பலமுறை கூறியிருக்கிறேன். அவர் செய்திருக்கும் சாதனைகள், அடைந்திருக்கும் வளர்ச்சியில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. அவரது ஆரம்ப காலத்திலேயே அவர் இந்தளவிற்கு வளர்வார் என நம்பினோம். ஆனால், ஃபிட்னெஸில் அவர் அடைந்திருக்கும் வளர்ச்சியும், மாற்றமும் தான் அபரிமிதமானது” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை