ஒருவர் நம்பிக்கை இல்லை என்றால் அவரை அணியில் ஏன் தேர்வு செய்தீர்கள் - கம்பீர் விளாசல்!

Updated: Tue, Nov 21 2023 18:25 IST
ஒருவர் நம்பிக்கை இல்லை என்றால் அவரை அணியில் ஏன் தேர்வு செய்தீர்கள் - கம்பீர் விளாசல்! (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயன இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. அப்போது இந்தியா 4 விக்கெட்களை இழந்த நிலையில், கேஎல் ராகுல் களத்தில் இருந்த போது ஆறாம் வரிசை பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவுக்கு பதில், ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். கேஎல் ராகுல் நிதான ஆட்டம் ஆடிய நிலையில், ஜடேஜா சற்று அதிரடி ஆட்டம் ஆடுவார் என எதிர்பார்த்த நிலையில் அவரும் நிதான ஆட்டம் ஆடி 22 பந்துகளில் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 

இதையடுத்தே சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். அவர் அதிரடி பேட்ஸ்மேன் எனும் நிலையில் அவர் அதிரடி ஆட்டத்தை தொடங்கும் முன்பே கே எல் ராகுல் ஆட்டமிழந்தார். அதன் பின் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் மட்டுமே இருந்ததால் சூர்யகுமார் யாதவ் நிதான ஆட்டம் ஆடி அவரும் 28 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 

இந்த நிலையில், சூர்யகுமார் யாதவை கே எல் ராகுல் அல்லது கோலி களத்தில் இருந்த போதே இறக்கி விட்டு இருந்தால் ஒரு பக்கம் அவர்கள் நிதான ஆட்டம் ஆட, மறுபுறம் சூர்யகுமார் யாதவ் தன் இயல்பான ஆட்டத்தை விளையாடி இருப்பார். ஆனால், சூர்யகுமாரை நம்பாமல் ஜடேஜாவை இறக்கியது ஏன், சூர்யகுமார் யாதவ் ரன் குவிப்பார் என நம்பிக்கை இல்லை என்றால் அவரை அணியில் தேர்வு செய்ததற்கு பதில் வேறு யாரையாவது அணியில் தேர்வு செய்து இருக்கலாமே என கேப்டன் ரோஹித் சர்மாவை நோக்கி கேள்வி எழுப்பி இருக்கிறார் கம்பீர்.

இதுகுறித்து  பேசிய அவர்,"சூர்யகுமார் யாதவுக்கு முன் ஜடேஜாவை ஏன் அனுப்பினார்கள் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது சரியான முடிவு என எனக்கு எந்த வகையிலும் தோன்றவில்லை. கே எல் ராகுல், கோலியுடன் இணைந்து நிதான ஆட்டம் ஆடிய நிலையில், அடுத்து சூர்யகுமார் யாதவை அனுப்பி அதிரடி ஆட்டம் ஆடுமாறு, அவரது இயல்பான ஆட்டத்தை அடுமாறு கூறி இருக்கலாம். ஏனெனில் அடுத்து பேட்ஸ்மேன் ஆன ஜடேஜா பேட்டிங் வர தயாராக இருந்து இருப்பார்.

ஆனால், இப்போது அனைவரும் சூர்யகுமார் யாதவ் ரன் குவிக்கவே திணறினார் என கூறுவார்கள். ஆனால், அவரது மனநிலையில் அடுத்து பேட்டிங் ஆட முகமது ஷமி, பும்ரா, சிராஜ், குல்தீப் ஆகியோர் தான் இருக்கிறார்கள் என எண்ணி நிதானமாக ஆடி இருப்பார். ஆறாம் வரிசையில் சூர்யகுமார் யாதவை ஆட வைப்பதில் உங்களுக்கு தயக்கம் இருக்கிறது என்றால் அவரை அணியில் தேர்வு செய்ததற்கு பதில் வேறு யாரையாவது அணியில் தேர்வு செய்து இருக்கலாமே" என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை