‘நீங்க இன்னும் மாறவே இல்லயே ஜி’ நெட்டிசன்களிடம் சிக்கிய காம்பீர்!

Updated: Wed, Jul 07 2021 22:05 IST
Image Source: Google

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் 40வது பிறந்த நாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இன்று காலை முதலே தோனியின் சிறந்த இன்னிங்ஸ் மற்றும் தருணங்களை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

தோனி என்றாலே அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது ஐசிசி கோப்பைகள் தான். அதிலும் குறிப்பாக 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் அவர் அடித்த கடைசி சிக்ஸரை இன்று வரை யாராலும் மறக்க முடியாது. ஏனென்றால் இந்திய ரசிகர்களின் 28 ஆண்டுகால உலகக்கோப்பை கனவை நினைவாக்கி கொடுத்தது அந்த சிக்ஸர் தான். எனவே அதனை ஒவ்வொரு ஆண்டும் தோனியின் பிறந்தநாளன்று ரசிகர்கள் நினைவுக்கூர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அதனை பார்த்து பொறாமை படும் வகையில் ஒரு செயலை இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் செய்துள்ளார். உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கவுதம் காம்பீர் 97 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஆனால் இன்று வரை தோனி அடித்த சிக்ஸர் மட்டுமே எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இதனால் அவர் இன்று தனது ஃபேஸ் புக் கவர் பக்கத்தில், தான் உலகக்கோப்பையில் சிரமப்பட்டு பேட்டிங் செய்த புகைப்படத்தை வைத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆத்திரமடைந்துள்ளனர். தோனியின் பிறந்தநாளை கொண்டாடி வரும் வேளையில் இப்படி ஒரு கேவலமான செயலில் ஈடுபடுவதா?, இந்த பதிவால் இன்று உங்களுக்கு ஆட்ட நாயகன் விருதா கொடுக்கப்போகிறார்கள். இது முற்றிலும் பொறாமை குணம் என காம்பீரை விளாசி வருகின்றனர்.

ஆனால் மற்றொரு புறம் காம்பீருக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்துள்ளன. காம்பீர் அடித்த 97 ரன்கள்தான் இந்தியாவுக்கு அடித்தளம் அமைத்தது. அவரை பாராட்டாமல், 91 ரன்களை அடித்த தோனியை மட்டும் எப்போதும் பாராட்டுகிறார்களே, இது எப்படி நியாயம் என கேள்வி எழுப்புகின்றனர். மேலும் அவர்கள், இந்திய அணி கூட்டு முயற்சியால் வென்ற கோப்பையை தோனி ஒருவரின் பெயரில் மட்டும் எழுதுவதா என்றும்  தோனி ஹேட்டர்ஸ் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.  இதனால் சமூக வலைதளத்தில் புதிய போர் வெடித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை