SA vs IND: கோலியின் மீது அதிர்ப்தியை வெளிப்படுத்திய கவாஸ்கர்!
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை தகர்த்துவந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக பெரிய ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிவருகிறார்.
கடைசியாக 2019ஆம் ஆண்டு சதமடித்த விராட் கோலி, அதன்பின்னர் 2020 மற்றும் 2021 ஆகிய 2 ஆண்டுகளிலும் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானதிலிருந்து, இப்போதுதான் முதல் முறையாக தொடர்ச்சியாக 2 ஆண்டுகள், ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்திருக்கிறார்.
தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் விராட் கோலிக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படும் நிலையில், முதல் டெஸ்ட்டின் 2 இன்னிங்ஸ்களிலும் மிகவும் எளிதாக தனது விக்கெட்டை ஒரே மாதிரியாக கோலி இழந்தது அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 327 ரன்கள் அடிக்க, தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு சுருண்டது. 130 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 305 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் தென்னாப்பிரிக்க அணி, 182 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவை என்பதால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது உறுதி.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்த கோலி, 2ஆவது இன்னிங்ஸில் 18 ரன்கள் மட்டுமே அடித்தார். 2 இன்னிங்ஸ்களிலுமே ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை விரட்டிச்சென்று அடித்து ஆட்டமிழந்தார். 2 இன்னிங்ஸ்களிலுமே ஒரேமாதிரி மிகவும் எளிதான பந்தில் கோலி ஆட்டமிழந்தார்.
விராட் கோலியின் ஷாட் செலக்ஷனால் அதிருப்தியடைந்த கவாஸ்கர், “ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஆங்கிளில் சென்ற பந்து அது. ஸ்டம்ப்புக்கு வெளியே சென்ற பந்தை விரட்டி அடித்து ஆட்டமிழந்தார் கோலி. முதல் இன்னிங்ஸில் எப்படி ஆட்டமிழந்தாரோ, அதேமாதிரியே 2வது இன்னிங்ஸிலும் ஆட்டமிழந்தார்.
உண்வு இடைவேளைக்கு பிறகு முதல் பந்தையே அசால்ட்டாக அடித்து ஆட்டமிழந்தார் கோலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சிறிய இடைவேளையாக இருந்தாலும் கூட, இடைவேளை முடிந்து ஆடும்போது பேட்ஸ்மேன்கள் கால் நகர்வுகள் ஃப்ளோவுக்கு வர சில நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
முதல் பந்தையே அடித்து ஆட முயற்சிக்கக்கூடாது. விராட் கோலி விரைவில் ஸ்கோர் செய்துவிட்டு டிக்ளேர் செய்யும் நோக்கில் தான் அடித்து ஆட முயன்றார். ஆனால் இதுமாதிரி டிக்ளேர் செய்ய வேண்டும் என்பதற்காக வேகமாக ஸ்கோர் செய்ய முயன்று சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பதை இந்திய அணி வாடிக்கையாக வைத்துள்ளது. கோலி அவுட்டான அந்த குறிப்பிட்ட பந்தை அவர் எளிதாக விட்டிருக்கலாம்” என்று கருத்து கூறியுள்ளார்.