ஐபிஎல் 2024: முதல் சில ஆட்டங்களை தவறவிடும் ஜெரால்ட் கோட்ஸி; பின்னடைவை சந்திக்கும் மும்பை!

Updated: Fri, Mar 15 2024 16:07 IST
ஐபிஎல் 2024: முதல் சில ஆட்டங்களை தவறவிடும் ஜெரால்ட் கோட்ஸி; பின்னடைவை சந்திக்கும் மும்பை! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு அணியும் கோப்பையை வெல்வதற்காக தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதேமயம் தொடருக்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை டிரெடிங் முறையில் மும்பை அணி வாங்கியது. அத்துடன் மும்பை அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத் ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவியையும் பறித்து ஹர்த்க் பாண்டியாவை அணியின் கேப்டனாக நியமித்துள்ளது. 

இதனால் ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் சில காயம் காரணமாக ஒருசில போட்டிகளை தவறவிடுவார்கள் என்ற செய்தி அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

அதன்படி காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள சூர்யகுமார் யாதவ் எப்போது அணிக்கு திரும்புவார் என்பது தெரியவில்லை. அதேசமயம் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவும் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது காயத்தை சந்தித்துள்ளதாகவும், இதனால் ஐபிஎல் தொடரில் ஒருசில போட்டிகளை தவறவிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் ஐபிஎல் தொடருக்காக பயிற்சி மேற்கொண்டு வரும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி தொடரின் முதல் சில போட்டிகளை தவறவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காயத்தை சந்தித்த கோட்ஸி, அதன்பின் நடைபெற்ற எஸ்ஏ20 லீக் தொடரின் முதல் பாதி ஆட்டங்களை தவறவிட்டார். 

அதன்பின் காயத்திலிருந்து குணமடைந்துள்ள அவர், தற்போது மும்பை அணியின் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தான் அவர் மீண்டும் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கோட்ஸி இன்னும் முழு உடல் தகுதியுடன் இல்லை என்றும் அதனால் ஐபிஎல் தொடரின் ஆரம்ப போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என்றும் செய்திகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை