ஷுப்மன் கில் மீண்டும் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!

Updated: Mon, Jan 29 2024 15:10 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 25ஆம் தேதி ஹைத்ராபாத்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அசத்தியுள்ளது. 

அதிலும் குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 190 ரன்களுக்கு மேல் இந்திய அணி முன்னிலைப் பெற்ற நிலையிலும், இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்றுள்ளது அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் டெஸ்ட் தொடரில் சோபிக்க முடியாமல் தவித்து வருகிறார். அதிலும் அவர் கடைசியாக விளையாடிய 10 இன்னிங்ஸில் 18, 06, 29, 02,26, 36, 10, 23 மற்றும் 0 என்ற அடிப்படையிலேயே ரன்களைச் சேர்த்துள்ளார். 

மேலும் ஆரம்பத்தில் இந்திய அணியின் தொடக்க வீரராக விளையாடி வந்த அவர், யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் வருகைக்கு பின் மூன்றாம் வரிசையில் விளையாடி வருகிறார். ஆனால் அவர் மூன்றாவது இடத்தில் களமிறங்கி இதுவரை சொல்லிக்கொள்ளும் அளவில் எந்தவொரு இன்னிங்ஸையும் விளையாடாததால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது மட்டுமின்றி, அவரை அணியில் சேர்க்க வேண்டுமே என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

 

இந்நிலையில் ஷுப்மன் கில்லை மீண்டும் தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், என்னைப் பொறுத்தவரையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெஸ்ய்வாலுடன் ஷுப்மன் கில்  தொடக்க வீரராகவும், ரோஹித் சர்மா மூன்றாவது இடத்திலும் களமிறங்க வேண்டும். அவர் பேட்டிங் செய்ய காத்திருப்பது உதவாத பட்சத்தில், தொடக்க வீரராக களமிறங்குவதே சிறந்ததாக இருக்கும். அதேபோல் ரோஹித் சர்மா ஸ்பின்னர்களை சிறப்பாக விளையாடுவார் என்பதால், மூன்றாவது வரிசையில் களமிறங்குவது அவரை எந்த விதத்திலும் பாதிக்காது” என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை இந்திய அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில் 2 சதம் மற்றும் 4 அரைசதங்களுடன் 1,063 ரன்களையும் சேர்த்துள்ளார். இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 02ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை