இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து மேக்ஸ்வெல் விலகல்?
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்க இருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக, உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் அதற்கான முன் தயாரிப்புகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் மூன்றாம் தேதி வரை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
இதற்கடுத்து ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக செப்டம்பர் 7ஆம் தேதி ஆரம்பித்தது செப்டம்பர் 17ஆம் தேதி வரையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்த இரண்டு ஆஸ்திரேலியா அணிகளுக்கும் மிசட்சல் மார்ஷ் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். உலகக் கோப்பைக்கு முன்பாக பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த சுற்றுப்பயணம் ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் முக்கியமானது.
இந்த நிலையில் இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவரும் விலகுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்தியாவிற்கு எதிராக உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய மண்ணில் விளையாட இருக்கும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு, இவர்கள் வருவதை உறுதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான இந்த தொடரில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அண்மையில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து மேக்ஸ்வெல் விலகினார். அதனால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து பேசிய கிளென் மேக்ஸ்வெல், “இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட வேண்டும் என நான் நினைக்கிறேன். ஆனால், இந்தியாவுக்கு எதிரான தொடரில் கண்டிப்பாக விளையாடியாக வேண்டும் என்ற அழுத்தம் எதுவும் இல்லை. ஆஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வுக் குழுவினர் எனக்கு எந்த ஒரு அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. உலகக் கோப்பை தொடங்குவதற்கு இன்னும் நாள்கள் இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால், அவசர அவசரமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தயாராக வேண்டிய சூழல் இல்லை” என்று கூறியுள்ளார்.