விராட் கோலி 110 சதங்களை விளாசுவார் - சோயிப் அக்தர்!

Updated: Sun, Jun 05 2022 20:53 IST
'God knows what's going to happen with Virat. It's my wish that he scores 110 centuries': Akhtar bac (Image Source: Google)

கடந்த 2019 ஆம் ஆண்டில் தனது கடைசி சர்வதேச சதத்தை அடித்ததில் இருந்து விராட் கோலியின் ஃபார்மில் சரிவு விவாதத்திற்குரிய விஷயமாக உள்ளது. முன்னாள் இந்திய கேப்டன் கோலி தற்போது மோசமான பேட்டிங் சரிவுகளில் ஒன்றைக் காண்கிறார். 

இதன்காரணமாக அவர் சமீபத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியதோடு, ஐபிஎல் தொடரிலும் தனது கேப்டன்சியை விட்டுக்கொடுத்தார். இதற்கிடையில் இந்திய டெஸ்ட் அணிக்கான கெப்டன்சியிலிருந்து விராட் கோலியை நீக்கி பிசிசிஐ ரசிகர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்தது.

அதன்பின் நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, முதல் முறையாக மூன்று அசாதாரண 'கோல்டன் டக்'களை பதிவு செய்துள்ளார். தற்போதைக்கு, 100-க்கும் மேற்பட்ட போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்காமல் அவர் விளையாடி வருகிறார்.

இந்தாண்டு கடுமையான ஐபிஎல் சீசனை எதிர்கொண்ட போதிலும், சச்சின் டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள் என்ற மைல்கல்லை கோலி முறியடிப்பதைக் காண விரும்பும் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார். 

இந்திய அணியின் விராட் கோலி தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 சதங்களையும், ஒருநாள் போட்டிகளில் 43 சதங்களையும் பெற்றுள்ளார். அவரது ஒட்டுமொத்த சதங்களின் எண்ணிக்கையை 70 ஆக உள்ளது. 

இதுகுறித்து பேசியுள்ள சோயிப் அக்தர், "உங்கள் கேரியரின் இறுதிக் கட்டத்தில், ஒவ்வொரு போட்டியிலும் செயல்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. உங்கள் மீது நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. கோலிக்கு என்ன நடக்கப் போகிறது என்பது கடவுளுக்குத் தெரியும், ஆனால் அவர் 110 சதங்கள் அடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். 

அவரது இலக்குகளை பெரியதாக வைத்திருங்கள். ஆனால் இந்த நேரத்தில், அவரது நம்பிக்கையும் மன உறுதியும் குறைந்திருக்க வேண்டும். அது அதிகரிக்கும் ஒரே வழி, இந்தியாவுக்காக விளாயாடுகிறோம் என்று நினைத்து களம் காண்பதுதான்" என்று அக்தர் கூறினார். 

இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்துடனான தொடரில் மீண்டும் தனது ஃபார்முக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை