ஐபிஎல் 2022: மணிக்கு 155கி.மீ வேகத்தில் பந்துவீச வேண்டும் - உம்ரான் மாலிக்!

Updated: Thu, Apr 28 2022 12:09 IST
Image Source: Google

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மும்பையில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. 

டாஸ் வென்ற குஜராத், பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. அபிஷேக் சர்மா 65 ரன்களும் மார்க்ரம் 56 ரன்களும் எடுத்தார்கள். ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

மிகவும் பரபரப்பான முறையில் இலக்கை விரட்டிய குஜராத் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் அணியின் இளம் புயல் உம்ரான் மாலிக் 5 விக்கெட்டுகள் எடுத்தும் குஜராத்தின் சஹா 68, திவேத்தியா 40, ரஷித் கான் 31 ரன்கள் எடுத்துக் கடைசிப் பந்தில் தங்கள் அணி வெற்றி பெற உதவினார்கள். 

கடைசி ஓவரில் குஜராத் அணி வெற்றி பெற 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் யான்சென் வீசிய ஓவரில் ரஷித் கான் 3 சிக்ஸர்களும் தெவாதியா 1 சிக்ஸரும் அடித்து அற்புதமான வெற்றியைச் சாத்தியமாக்கினார்கள். ஆனாலும் இப்போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்த உம்ரான் மாலிக், ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 

பரிசளிப்பு விழாவில் பேசிய அவர், “என்னால் எவ்வளவு வேகமாகப் பந்துவீச முடியுமோ அவ்வளவு வேகமாகப் பந்துவீசுவதே லட்சியமாக இருந்தது. மைதானத்தின் அளவு சிறியதாக உள்ளதால் ஸ்டம்புக்கு நேராகப் பந்துவீச எண்ணினேன். 

கடவுள் விருப்பப்பட்டால் மணிக்கு 155 கி.மீ. வேகத்தில் பந்துவீசுவேன். ஒருநாள் நிச்சயம் அதைச் செய்வேன். தற்போதைக்கு நன்றாகப் பந்துவீச வேண்டும் என்பதே விருப்பம்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை