ஷஃபாலி எதிராக பந்து வீசுவது சவாலாக இருக்குகிறது - சோஃபியா எக்லெஸ்டோன்
இங்கிலாந்து - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி பிரிஸ்டோலில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீராங்கனையாக களமிறங்கிய ஷஃபாலி வர்மா முதல் இன்னிங்ஸில் 95 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 56 ரன்களையும் சேர்த்துள்ளார்.
இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சுனில் கவாஸ்காருக்கு பிறகு அறிமுக டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்தவர் எனும் பெருமையை ஷஃபாலி பெற்றுள்ளார்.
மேலும் போட்டியின் கடைசில் நாளான இன்று இந்திய அணி 82 ரன்கள் பின் தங்கிய நிலையில் விளையாடவுள்ளது. இந்திய அணி தரப்பில் ஷஃபாலி வர்மா 56 ரன்களுடனும், தீப்தி சர்மா 18 ரன்களுடனும் இன்றைய போட்டியை தொடரவுள்ளனர்.
இந்நிலையில், அறிமுக வீராங்கனையான ஷஃபாலி வர்மாவுக்கு எதிராக பந்துவீச சவாலாக இருக்கிறது என இங்கிலாந்து அணி வீராங்கனை சோஃபியா எக்லெஸ்டோன் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய எக்லெஸ்டோன்,“ஷஃபாலி வர்மாவுக்கு எதிராக ஒவ்வொரு முறை பந்து வீசும் போது புது புது சவால்களை சந்தித்து வருகிறேன். அது டி20 ஆக இருந்தாலும் சரி, டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் சரி. அவர் இயற்கையாக பந்தை அடித்து ஆடும் திறன் பெற்றவர்.
அதனால் அவாருக்கு ஒவ்வொரு முறை பந்துவீசும் போது எனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பந்துவீசுவேன். அவரை நான் வீழ்த்தினால் போட்டி எங்களது பக்கம் திரும்பும் என்பது தெரியும். ஆனால் அவருக்கு பந்துவீசுவது அவ்வளவு எளிதானது அல்ல.
ஷஃபாலி வர்மாவுக்கு பந்துவீசும் போதெல்லாம் நான் அவரை வீழ்த்த வேண்டும் என்பதை மட்டுமே எனது நோக்கமாக கொண்டிருப்பேன். அதனால் தான் அவர் என் பந்துவீச்சில் சிக்சர் அடிப்பதற்கு முன்னதாகவே அவரை வெளியேற்ற முயற்சித்து வருகிறேன்” என்று தெரிவித்தார்.