நீச்சல் குளத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் ரிஷப் பந்த்; வைரல் காணொளி!

Updated: Wed, Mar 15 2023 22:27 IST
Image Source: Google

கடந்தாண்டு டிசம்பர் 30 அன்று உத்தரகண்ட் மாநிலம், ரூா்கியில் உள்ள தனது தாயைப் பாா்க்க டெல்லியில் இருந்து பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், அதிகாலை காரில் சென்றாா். அம்மாநிலத்தின் மங்லௌா் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் ரிஷப் பந்த் படுகாயமடைந்தாா்.

உயா் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு நெற்றிப்பகுதியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்காக ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ செய்யப்பட்டது. இந்த விபத்தில் ரிஷப் பந்தின் தலை, முதுகு, காலில் காயங்கள் ஏற்பட்டன. விபத்துக்குள்ளான காா் முழுமையாகத் தீப்பிடித்து உருக்குலைந்தது. 

மேல்சிகிச்சைக்காக ரிஷப் பந்த் மும்பைக்கு மாற்றப்பட்டார். மும்பையில் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் ரிஷப் பந்த் அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையில் விளையாட்டு மருத்துவச் சிகிச்சைத் துறையின் தலைவர், மருத்துவர் தின்ஷாவின் மேற்பார்வையில் ரிஷப் பந்துக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜனவரி மாதம் முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனால் ஐபிஎல் போட்டியில் ரிஷப் பந்தால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் ரிஷப் பந்த் புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். ஊன்றுகோலின் உதவியுடன் நீச்சல் குளத்தில் நடைபயிற்சி பெறும் காணொளியை வெளியிட்டு, ‘சிறிய விஷயங்கள், பெரிய விஷயங்கள், இதற்கு மத்தியில் எல்லாவற்றுக்கும் நன்றி மறக்காமல் இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். காயத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் ரிஷப் பந்துக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை