ஐபிஎல் 2023: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் இன்று முதல் கோலாகலமாக தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் இரு குழுக்காலாக பிரிக்கப்பட்டு நடத்தப்படும் இத்தொடரின் இறுதிப்போட்டியில் மே 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக போட்டி பொதுவான இடத்தில் நடந்தது. அதாவது அணிகள் தங்களது உள்ளூர் மைதானங்களில் விளையாட முடியாத நிலைமை இருந்தது.
தற்போது கரோனா கட்டுக்குள் வந்து விட்டதால் இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் களம் காண இருப்பது கூடுதல் உற்சாகத்தை தந்துள்ளது.
இதில் இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, நான்கு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு சாம்பியன் அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ்
- இடம் - நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், அகமதாபாத்
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
கடந்த ஆண்டில் முதல் 4 ஆட்டங்களில் வரிசையாக தோற்றதுடன் கடைசியில் 9ஆவது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை அணி அந்த மோசமான நிலைமையை மாற்றி வெற்றியுடன் தொடங்கும் ஆவலில் வியூகங்களை தீட்டி வருகிறது. 41 வயதான கேப்டன் தோனிக்கு அனேகமாக இது தான் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட அவர் ஏறக்குறைய ஓராண்டுக்கு பிறகு களத்திற்கு வருவதால் அவரது தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும், முன்பு போல் முத்திரை பதிப்பாரா ? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அவர் இன்னும் 22 ரன் எடுத்தால் ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்குவார்கள். அம்பத்தி ராயுடு, ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே உள்ளிட்டோர் பேட்டிங்குக்கு வலுசேர்க்கிறார்கள். ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கால் முட்டி பிரச்சினையால் தொடக்க கட்ட ஆட்டங்களில் பந்து வீசமாட்டார். ஒரு வகையில் இது பின்னடைவு தான். அவர் ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் விளையாட உள்ளார். பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிரிட்டோரியஸ், தீபக் சாஹர், மிட்செல் சான்ட்னெர், துஷர் தேஷ் பாண்டே நம்பிக்கை அளிக்கிறார்கள்.
அதேசமயம் கடந்த ஆண்டு அறிமுக அணியாக அடியெடுத்து வைத்து எல்லா அணிகளையும் பதம் பார்த்து கடைசியில் கோப்பையையும் வென்று வரலாறு படைத்த குஜராத் டைட்டன்ஸ் அணியில் நட்சத்திர பட்டாளத்துக்கு குறைவில்லை. சுப்மன் கில், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, மேத்யூ வேட், சாய் சுதர்சன், ரஷித்கான், முகமது ஷமி, அல்ஜாரி ஜோசப், விருத்திமான் சஹா என்று மேட்ச் வின்னர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். இதில் டேவிட் மில்லர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும் நெதர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஆடுவதால் முதல் இரு ஆட்டங்களில் விளையாடமாட்டார்.
கடந்த சீசனில் நடந்த இரு லீக்கிலும் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி அமர்க்களப்படுத்திய குஜராத் அணி உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதில் தீவிரம் காட்டுகிறது. அதே சமயம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க தோனி படை வரிந்து கட்டும். இதனால் தொடக்க ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 2
- குஜராத் டைட்டன்ஸ் - 2
- சிஎஸ்கே - 0
போட்டியை காணும் முறை
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இதற்கான டிஜிட்டல் உரிமத்தை வியாகாம்18 நிறுவனம் பெற்றுள்ளது. அந்த நிறுவனம் ஐபிஎல் போட்டியை இணையதளத்தில் 'ஜியோ சினிமா'வில் வர்ணனையுடன் இலவசமாக கண்டுகளிக்க ஏற்பாடு செய்துள்ளது.
உத்தேச லெவன்
குஜராத் டைட்டன்ஸ் - ஷுப்மான் கில், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா (கே), விஜய் சங்கர், மேத்யூ வேட், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், ஷிவம் மாவி, முகமது ஷமி, ஜோஷ்வா லிட்டில்
சென்னை சூப்பர் கிங்ஸ் - டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, சிவம் துபே, அம்பதி ராயுடு, பென் ஸ்டோக்ஸ், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கே), தீபக் சாஹர், சிமர்ஜீத் சிங், மதீஷா பத்திரனா.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள் - டெவான் கான்வே
- பேட்டர்ஸ் - ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், கேன் வில்லியம்சன்
- ஆல்ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, பென் ஸ்டோக்ஸ், ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி
- பந்துவீச்சாளர்கள் - ரஷித் கான், முகமது ஷமி, தீபக் சாஹர்.
கேப்டன்/ துணைக்கேப்டன் தேர்வு - ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரஷித் கான், பென் ஸ்டோக்ஸ்