ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் 45ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் முதல் முறையாக பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மேலும், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ஆர்சிபி அணி இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
குஜராத் டைட்டன்ஸ்
ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் பட்டியலின் 7ஆம் இடத்தில் உள்ளது. அணியின் பேட்டிங்கில் சாய் சுதர்ஷன் கேப்டன் சுப்மன் கில், டேவிட் மில்லர், விருதிமான் சாஹா ஆகியோர் இருந்தாலும் அவர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தது அணிக்கு பின்னடைவாக உள்ளது.
பந்துவீச்சிலும் ரஷித் கான், சாய் கிஷோர் ஆகியோரைத் தவிர்த்து மற்ற விரர்கள் யாரும் நடப்பு தொடரில் குஜராத் அணியில் பெரிதாக சோபிக்கவில்லை. மேலும் அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டான மோஹித் சர்மாவும் கடந்த போட்டியில் 70 ரன்களை வாரி வழங்கி இருந்தார். இதனால் குஜராத் அணியின் பந்துவீச்சும் பெரும் கேள்விகுறியாக உள்ளதால் அது நிச்சயம் அந்த அணிக்கு பெரும் சிக்கலாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
குஜராத் டைட்டன்ஸ் உத்தேச லெவன்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், அஸ்மத்துல்லா ஒமர்சாய், டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், சாய் கிஷோர், மோகித் சர்மா, நூர் அகமது, சந்தீப் வாரியர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
மறுபக்கம் ஃபாஃப் டூ பிளேசிஸ் தலைமையிலான ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இனி விளையாடும் அனைத்து போட்டிகளுமே வாழ்வா சாவா ஆட்டமே. ஏனெனில் இந்த தொடரில் ஆர்சிபி அணி விளையாடிய 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 2 புள்ளிகளை மட்டுமே எடுத்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அந்த அணி அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் குறித்து யோசிக்க முடியும்.
அணியின் பேட்டிங்கில் விராட் கோலி, வில் ஜேக்ஸ், ஃபாஃப் டூ பிளெசிஸ், கேமரூன் க்ரீன், தினேஷ் கார்த்திக், ராஜத் பட்டிதார் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர். பந்துவீச்சை பொறுத்தவரையில், முகமது சிராஜ், யாஷ் தயாள், கரண் சர்மா, லோக்கி ஃபெர்குசன், கேமரூன் க்ரீன் உள்ளிட்ட வீரர்கள் இருந்தாலும், ரன்களை கட்டுப்படுத்த தவறிவருவது அணிக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.
ஆர்சிபி உத்தேச லெவன்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), வில் ஜாக், ராஜத் பட்டிதார், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங், கர்ண் சர்மா, லோக்கி ஃபெர்குசன், முகமது சிராஜ், யாஷ் தயாள்.