அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த குடகேஷ் மோட்டி - காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்ய, வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
அதன்படி, முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ ஷெஃபர்ட், குடகேஷ் மோட்டி மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் ஓருரளவு தாக்குப்பிடித்து விளையாடியதன் காரனமாக 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக நிகோலஸ் பூரன் 38 ரன்னும், ரொமாரியோ ஷெஃபர்ட் 35 ரன்னும், குடகேஷ் மோட்டி 33 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 30 ரன்களையும் சேர்த்தனர்.
இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷாகிப் மஹ்மூத் 4 விக்கெட்டுகளையும், பில் சால்ட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, 183 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர் பிலிப் சால்ட் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் வில் ஜாக்ஸ் 17 ரன்னில் அவுட்டானார். ஜாஸ் பட்லர் டக் அவுட்டானார்.
பின்னர் பிலிப் சால்டுடன் இணைந்த ஜேக்கப் பெத்தெலும் அதிரடியாக விளையாட அணியின் வெற்றியும் எளிதானது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பில் சால்ட் தனது மூன்றாவது சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய ஜேக்கப் பெத்தெலும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, இங்கிலாந்து அணியானது 16.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பில் சால்ட் 9 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 103 ரன்களையும், ஜேக்கப் பெத்தெல் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 58 ரன்களையும் சேர்த்தனர். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. மேலும் சதம் விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிகொடுத்த பில் சால்ட் இப்போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் குடகேஷ் மோட்டி தனது அபாரமான கேட்ச்சின் மூலம் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பாட்லரை வெளியேற்றினார். அதன்படி இன்னிங்ஸின் 7ஆவது ஓவரை ரொமாரியோச் ஷெஃபர்ட் வீசிய நிலையில் அந்த ஓவரின் நான்காவது பந்தை ஜோஸ் பாட்லர் பாவுண்டரி அடிக்கும் முயற்சியில் தேர்ட்மேன் திசையை நோக்கி தூக்கி அடித்தார்.
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் பந்தில் போதிய வேகமில்லாத காரணத்தால் பந்து பவுண்டரி எல்லையை தாண்டாமல் மைதானத்தின் உள்ளயே விழுத்தொடங்கியது. அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த குடகேஷ் மோட்டி யாரும் எதிர்பாரத வகையில் ஒற்றைக் கையில் கேட்ச் பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். இதன் காரணமாக ஜோஸ் பட்லர் முதல் பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். இந்நிலையில் குடகேஷ் மோட்டி பிடித்த இந்த கேட்ச் குறித்த கணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.