ஹர்திக் பாண்டியாவை தடுக்க ஒருபோது முயற்சிக்கவில்லை - ஆஷிஷ் நெஹ்ரா!

Updated: Sun, Mar 17 2024 14:16 IST
ஹர்திக் பாண்டியாவை தடுக்க ஒருபோது முயற்சிக்கவில்லை - ஆஷிஷ் நெஹ்ரா! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் துபாயில் ஐபிஎல் வீரர்களுக்கான மினி ஏலம் நடத்தப்பட்டது. அதற்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் தக்கவைத்த மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களை அறிவித்தது. அதேசமயம், டிரேடிங் முறையில் வீரர்களை சில அணிகள் பிற அணிகளிடம் இருந்தும் வாங்கினர். 

அந்த வகையில் ஐபிஎல் தொடரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குஜராத் டைட்டன்ஸ் அணியை அதன் கேப்டனாக ஹார்திக் பாண்டியா வெற்றிகரமாக வழிநடத்தி வந்தார். அதிலும் குறிப்பாக அறிமுக சீசனிலேயே அவர் தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. அதனபின் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும்  வாய்ப்பை தவறவிட்டது. 

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் மினி ஏலத்திற்கு முன்னதாக ஹார்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் வாங்கியது. அதுமட்டுமின்றி அணியின் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மாவை அப்பதவியில் இருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவை அணியின் கேப்டனாக அறிவித்தது. இதனையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக இளம் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், ஹார்திக் பாண்டியா மும்பை அணிக்கு சென்றதை தடுக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை என குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் அடுத்த விஷயங்களை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஹார்திக் பாண்டியா மற்றும் முகமது ஷமி போன்ற வீரர்களின் அனுபவத்தை உங்களால் வாங்க முடியாது. அவர்கள் இருவரும் அணியில் இல்லாதது குஜராத் டைட்டன்ஸுக்கு எளிதாக இருக்கப் போவதில்லை. 

 

ஆனால், இதனை கற்றுக் கொள்வதற்கான சூழலாக எடுத்துக் கொண்டு அணியினர் முன்னோக்கி செல்ல வேண்டும். குஜராத் அணிக்காக பாண்டியாவை தொடர்ந்து விளையாட வலியுறுத்த ஒருபோதும் நான் முயற்சிக்கவில்லை. அதிகம் விளையாடினால் அதிக அனுபவத்தைப் பெற முடியும். அவர் வேறு ஏதாவது அணிக்கு செல்ல நினைத்திருந்தால் அவரை தடுத்து நிறுத்தியிருக்கலாம். அவர் மும்பை அணிக்கு சென்றதால் அதனை செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை