‘சுல்தான் ஆஃப் ஸ்விங்’ வாசிம் அக்ரம் #HBDWasimAkram

Updated: Thu, Jun 03 2021 11:47 IST
Image Source: Google

இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் தான். இளம் தலைமுறை பந்து வீச்சாளர்களிடம் நீங்கள் யாரை போன்று பந்து வீசி விரும்புகிறீர்கள் என்று கேட்டால், சந்தேகமின்றி வாசிம் அக்ரமை தான் கூறுவார்கள்.

நேர்த்தியான யார்க்கர் வீசுவது, பந்தை ஸ்விங் செய்வது என இவரை மிஞ்சிய நபர் இல்லை என்று சொல்லலாம். 1984 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் வாசிம் அக்ரம் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமானார். 

அன்றிலிருந்து 2003ஆம் அண்டு வரை சுமார் 20 வருடங்கள் கிரிக்கெட் விளையாட்டை தனது அபாரமான பந்துவீச்சால் கட்டிப்போட்டார். இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 104 டெஸ்ட் போட்டியில் 414 விக்கெட்டுகளையும் , 356 ஒருநாள் போட்டியில் 502 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய முதல் நபர் என்ற பெருமையை பெற்றார்.

 

1992ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையை வெல்ல இவரது பந்து வீச்சும் முக்கிய பங்கு வகித்தது என்றால் அது மிகையாகாது. மேலும், டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கெதிராக 257 ரன்கள் எடுத்து பந்து வீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் தான் ஒரு லெஜண்ட் என்பதை நினைவுபடுத்தினார். 

பிறகு 1993 முதல் 1999ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். இவரது தலைமையின் கீழ் விளையாடிய பாகிஸ்தான் அணி 1999ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடியது. ஆனால் அப்போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. 

 

இப்படி, வேகப்பந்து வீச்சில் தனி வரலாறு படைத்த வாசிம் அக்ரம் 56ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் உலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை