சிஸ்கேவின்‘சுட்டி குழந்தை’ சாம் கரண் #HBDSamcurran
கடந்த 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது பெரிதும் பேச பட்டவர்களில் முக்கியமான வீரர் சிஎஸ்கேவின் சாம் கரண். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான இவர், கடந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டார்.
அத்தொடரில் சென்னை அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய சாம் கரண் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தார்.
அதேபோல் அவர் உள்ளூர் போட்டிகளில் மட்டுமின்றி சர்வதேச போட்டிகளிலும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதில் மிக முக்கியமானது இந்தாண்டு நடைபெற்ற இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி தான்.
அப்போட்டியில் சாம் கரணின் அதிரடியான ஆட்டம் ஒரு நிமிடம் இந்திய அணிக்கே தோல்வி பயத்தைக் காட்டியது. ஏனெனில் இங்கிலாந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் திரும்ப இந்திய ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையில் இருந்தனர்.
ஆனால் அவர்களின் மகிழ்ச்சியை குலைக்கும் விதமாக சாம் கரணின் இன்னிங்ஸ். எட்டாவது வீரராக களமிறங்கிய சாம் கரன் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இருப்பினும் அவரால் கடைசி ஓவரில் அதிரடியை காட்ட முடியாததால் அப்போட்டியில் இங்கிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இருப்பினும் அப்போட்டியின் ஆட்டநாயகனாக சாம் கரண் தேர்வு செய்யப்பட்டார்.
ஏனெனில் எட்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சாம், 95 ரன்களை குவித்து அசத்தியிருந்தார். சர்வதேச ஒருநாள் போட்டியில் எட்டாம் வரிசையில் களமிறங்கிய வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்னும் இதுதான்.