ஆர்சிபி அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து ஹர்பஜ்ன், இம்ரான் தாஹிர் கருத்து!

Updated: Wed, Apr 26 2023 22:36 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி ஆட்டத்தின் முதல் போட்டியில் பெங்களூரு மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பொறுத்தவரை கேப்டன் பாப் நானூறு ரன்களுக்கு மேல் குவித்து சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். தொடக்க வீரராக இவருடன் களம் இறங்கும் விராட் கோலியும் நான்கு அரை சதங்களுடன் ஏழு ஆட்டங்களில் 279 ரன்கள் எடுத்து சிறப்பான நிலையில் இருக்கிறார். 

பெங்களூர் அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்களின் இந்த சீசனில் மூன்றாவது இடத்தில் மேக்ஸ்வெல் இருக்கிறார். ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணியைப் பொறுத்தவரை இந்த மும்மூர்த்திகளின் ஆட்டத்தைப் பொறுத்தே அந்த அணியின் வெற்றியும் தோல்வியும் அடங்கியிருக்கிறது. கடந்த வருடம் மிடில் ஆர்டர் நல்ல முறையில் விளையாடிருக்க, இந்த முறை மீண்டும் பழைய மோசமான முறைக்கே பெங்களூரு அணியின் மிடில் ஆர்டர் திரும்பி இருக்கிறது.

இந்த நிலையில் பெங்களூர் அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் “பெங்களூர் அணிக்கு விராட் கோலி பேட்டிங்கில் பொறுப்பெடுத்துக் கொள்வது மிக முக்கியமானது ஆகும். கேப்டன் பாப் உடன் விராட் கோலி அமைக்கும் பார்ட்னர்ஷிப் மிக முக்கியமானது. இவர்கள் இருவரது பேட்டிங் ஃபார்மும் இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை விராட் கோலியின் கைகளில்தான் எல்லாம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

இவரைத் தொடர்ந்து பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் சுழற்வீச்சாளர் இம்ரான் தாஹிர், “விராட் கோலி ஒரு கிளாஸ் பேட்ஸ்மேன். அவரை வெளியேற்றுவது எனக்கு எப்பொழுதுமே மிகச் சிரமமாகவே இருந்திருக்கிறது. ஐபிஎல் தொடரில் அவர் நிறைய ரன்கள் எடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவரது அணி அவர் மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறது. இந்த காரணத்திற்காக அவர் நீண்டு விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை