ஹர்திக் பாண்டியாவை விடுவித்தது ஏன்? - குஜராத் அணி இயக்குனர் விளக்கம்!

Updated: Mon, Nov 27 2023 21:10 IST
ஹர்திக் பாண்டியாவை விடுவித்தது ஏன்? - குஜராத் அணி இயக்குனர் விளக்கம்! (Image Source: Google)

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் துபாயில் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை கழற்றி விட்டு தேவையான வீரர்களை தக்க வைத்து இறுதிக்கட்ட பட்டியலை நேற்று சமர்ப்பித்தது. இதற்கிடையே சில அணிகள் தாங்கள் விரும்பும் வீரர்களை மற்ற அணிகளிடமிருந்து டிரேடிங் முறையில் வாங்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டன.

அதில் குறிப்பாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்து வந்த நட்சத்திர இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வாங்கப்பட்டது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் மும்பை அணியில் தம்முடைய ஐபிஎல் பயணத்தை தொடங்கிய அவர் மிகச் சிறப்பாக விளையாடி 2015, 2017, 2019, 2020 ஆகிய வருடங்களில் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

ஆனாலும் அதன் பின் காயமடைந்து தடுமாறியதால் மும்பை நிர்வாகம் தக்க வைக்க தவறிய அவரை குஜராத் நிர்வாகம் 15 கோடி என்று பெரிய தொகைக்கு வாங்கி கேப்டனாகவும் அறிவித்தது. அதில் முதல் சீசனிலேயே சிறப்பாக விளையாடிய பாண்டியா கோப்பையை வென்று கடந்த சீசனில் இறுதிப்போட்டி வரை குஜராத்தை அழைத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றினார்.

இந்த சூழ்நிலையில் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மா கேப்டனாக இருக்கும் நிலையில் பாண்டியாவை மும்பை வாங்கியது ஏன் என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. குறிப்பாக மாலை 5.25 மணிக்கு குஜராத் தக்க வைப்பதாக அறிவித்த ஹர்திக் பாண்டியாவை 7.25 மணிக்கு மும்பை நிர்வாகம் டிரேடிங் முறையில் வாங்கியது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது.

இந்நிலையில் தம்முடைய பழைய அணியான மும்பைக்கு ஹர்திக் பாண்டியா திரும்ப செல்வதாக தங்களிடம் தெரிவித்த முடிவை மதித்து அனுமதி கொடுத்ததாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் இயக்குனர் விக்ரம் சலோங்கி தெரிவித்துள்ளார். இதுபற்றி பேசிய அவர், “குஜராத் அணியின் முதல் கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 சிறப்பான சீசன்களை எங்களுக்கு கொடுத்தார். அதில் முதல் சீசனில் கோப்பையை வென்ற நாங்கள் 2ஆவது சீசனில் இறுதிப்போட்டி வரை சென்றோம்.

தற்போது அவர் தம்முடைய அணியான மும்பை இந்தியன்ஸ்க்கு செல்ல விரும்புவதாக எங்களிடம் தெரிவித்தார். இந்த முடிவை நாங்கள் மதிக்கிறோம். மேலும் வருங்காலத்தில் அவர் சிறப்பாக செயல்படுவதற்கு வாழ்த்துகளையும் தெரிவிக்கிறோம்” என்று கூறினார். இந்த நிலையில் குஜராத் அணியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாகவும் மும்பை அணிக்கு வருங்கால கேப்டனை நியமிப்பதற்காகவும் ஹர்திக் பாண்டியா டிரேடிங் முறையில் இப்படி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரசிகர்கள் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை