SL vs IND: ஒருநாள், டி20 அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன்களை நியமிக்கும் பிசிசிஐ!
இந்திய அணி தற்போது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்துள்ள முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளன. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து விளையாடி வருகிறது.
இதனையடுத்து இந்திய அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூலை 27ஆம் தேதி முதல் ஜீலை 30ஆம் தேதி வரையிலும், ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 07ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன. இத்தொடருக்கான இந்திய அணியும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இத்தொடரில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இவர்கள் மூவரும் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடினர்.
இதில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், தற்போது இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்டியா அல்லது கேஎல் ராகுலுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படும் என்ற தகவல்களும் வெளியாகின.
இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுலும், டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்படவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு என இருவேறு கேப்டன்களை இந்திய அணி அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இதில் ஹர்திக் பாண்டியா ஏற்கெனவே கடந்தாண்டு முதல் இந்திய டி20 அணியின் கேப்டன் மற்றும் துணைக்கேப்டனாக செயல்பட்டு வருகிறது. அதேசமயம் கேஎல் ராகுல் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருவதுடன், கடந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.