சச்சின், கங்குலி, யுவராஜ் வரிசையில் இணைந்த ஹர்திக் பாண்டியா!

Updated: Mon, Jul 18 2022 14:32 IST
Image Source: Google

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்ச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்பின் 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் (1), ரோஹித் சர்மா (17) மற்றும் விராட் கோலி (17) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா 71 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் 113 பந்துகளில் 125 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், 42.1 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தநிலையில், இந்த போட்டியில் 71 ரன்கள் குவித்ததோடு, 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த ஹர்திக் பாண்டியா இந்த போட்டியின் மூலம் பல்வேறு சாதனைகளுக்கும் சொந்தக்காரராகியுள்ளார்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என இரண்டு விதமான போட்டிகளிலும், ஒரே போட்டியில் அரைசதமும் அடித்து 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்டியா பெற்றுள்ளார்.

அதே போல், ஒருநாள் போட்டிகளில், ஒரே போட்டியில் 50+ ரன்கள் அடித்துவிட்டு, 4 விக்கெட்டுகளும் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலிலும் ஹர்திக் பாண்டியா, சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் போன்ற முன்னாள் வீரர்களுடன் இணைந்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் ஒரே போட்டியில் 50+ குவித்துவிட்டு நான்கு விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியல்.

  • ஸ்ரீகாந்த் – 70 & 5/27 v இங்கிலாந்து – 1988ஆம் ஆண்டு
  • சச்சின் டெண்டுல்கர் – 141 & 4/38 v ஆஸ்திரேலியா – 1998ஆம் ஆண்டு
  • கங்குலி – 130* & 4/21 v இலங்கை – 1999ஆம் ஆண்டு
  • கங்குலி – 71* & 5/34 v ஜிம்பாப்வே – 2000ஆம் ஆண்டு
  • யுவராஜ் சிங் – 118 & 4/28 v 2011ஆம் ஆண்டு
  • யுவராஜ் சிங் – 50* & 5/31 v அயர்லாந்து 2011ஆம் ஆண்டு
  • ஹர்திக் பாண்டியா – 71 & 4/24 – 2022ஆம் ஆண்டு
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை