IRE vs IND: தீபக் ஹூடாவை ஓபனிங்னில் அனுப்பியது குறித்து பாண்டியா விளக்கம்!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி டப்ளினில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. மழைக் காரணமாக போட்டி 12 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. அதன்படி அயர்லாந்து முதலில் பேட்டிங் விளையாடி 107 ரன்களை எடுத்தது.
இதையடுத்து ஆடிய இந்திய அணி 9.2 ஓவரிலே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடந்து வெற்றிப் பெற்றது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தீபக் ஹூடா 47 ரன்களைச் சேர்த்திருந்தார்.
இப்போட்டியில் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்க்கு பதிலாக தீபக் ஹூடா களமிறங்கினார். இந்நிலையில் ருதுராஜ்க்கு பதிலாக தீபக் ஹூடா விளையாடியது ஏனென கேப்டன் ஹார்திக் பாண்டியா விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பாண்டியா, “ருத்துக்கு பின்னங்காலின் சதைப் பகுதியில் சிறிய பிரச்சனை இருந்தது. அவரை இந்நிலையில் விளையாட வைப்பது சரியான முடிவாக தோன்றவில்லை. எங்களுக்கு பேட்டிங் தரவரிசை ஒரு பிரச்சினையே இல்லை. எல்லாருமே ஒரு இடத்தில்தான் விளையாடுகிறோம். அவரது காயத்துடன் விளையாட நாங்கள் விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.