அடுத்த ஆண்டு ஹர்திக் பாண்டியா ஓய்வுபெற்று விடுவார் - ரவி சாஸ்திரியின் கருத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Updated: Sat, Jul 23 2022 22:30 IST
Hardik Pandya will retire after...: Ravi Shastri
Image Source: Google

இந்திய கிரிக்கெட்டில் கபில் தேவுக்கு அடுத்த சிறந்த மற்றும் தரமான ஆல்ரவுண்டராக பார்க்கப்படுபவர் ஹர்திக் பாண்டியா. அதிரடியான பேட்டிங், அருமையான பவுலிங், அபாரமான ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் அணிக்கு பங்களிப்பு செய்யக்கூடியவர்.

இந்திய அணியில் ஆல்ரவுண்டராக தனக்கான நிரந்தர இடத்தை பிடித்துவைத்திருந்த ஹர்திக் பாண்டியா, இடையில் ஒன்றிரண்டு ஆண்டுகள் காயம் காரணமாக இந்திய அணியில் தொடர்ந்து ஆடமுடியாமல் தனக்கான இடத்தை இழந்தார்.

அதன்விளைவாக மீண்டும் இந்திய அணியில் தனக்கான நிரந்தர இடத்தை பிடித்துவிட்ட ஹர்திக் பாண்டியா, இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் அபாரமாக விளையாடினார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அபாரமாக செயல்பட்டு இந்திய அணி தொடரை வெல்ல காரணமாக இருந்த ஹர்திக் பாண்டியா, தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

ஒரு ஆல்ரவுண்டர், டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான ஃபார்மட்டிலும் ஆடுவது என்பது இன்றைய சூழலில் மிகக்கடினமான விஷயம். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்த 3 ஃபார்மட்டிலும் ஆடுவது மட்டுமல்லாது, ஐபிஎல்லிலும் ஆடுவதால் வீரர்கள் மீதான பணிச்சுமை அதிகரிக்கிறது. அதனால் தான், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அண்மையில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.

இதுகுறித்து பேசியுள்ள ரவி சாஸ்திரி, “டெஸ்ட் கிரிக்கெட் எப்போதுமே இருக்கும். ஏற்கனவே வீரர்கள் தாங்கள் எந்த ஃபார்மட்டில் ஆடவேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஹர்திக் பாண்டியாவை எடுத்துக்கொள்ளுங்கள். டி20 கிரிக்கெட்டில் ஆடவேண்டும் என்பதில்  பாண்டியா உறுதியாக இருக்கிறார். வேறு எதிலும் ஆடுவதை பற்றி அவர் கவலைப்படவில்லை. 

அடுத்த ஆண்டு நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா விளையாடுவார். அதன்பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விலகிவிடுவார். மற்ற வீரர்களும் தாங்கள் ஆடவேண்டிய ஃபார்மட்டை அவர்களே தேர்வு செய்துகொண்டு, விரும்பாத ஃபார்மட்டிலிருந்து விலகிவிடுவார்கள். அது அவர்களது உரிமை” என்று தெரிவித்தார்.
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை