சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக சாதனை படைத்த ஹாரிஸ் ராவுஃப்!

Updated: Sat, Nov 16 2024 21:33 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது அபாரமான வெற்றியைப் பதிவுசெய்துள்ளதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகித்துள்ளது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஆரோன் ஹர்டி 28 ரன்களும், மேத்யூ ஷார்ட் 32 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஸ் ராவுஃப் 4 விக்கெட்டுகளையும், அப்பாஸ் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பின் உஸ்மான் கான் சிறப்பாக விளையாடி 38 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். அதேசமயம் இறுதிவரை போராடிய இர்ஃபான் கான் 28 பந்தில் 37 ரன்கள் அடித்த நிலையிலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 19.4 ஓவரில் 134 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்பென்சர் ஜான்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 13 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியானது 2-0 என்ற கணக்கில் பகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரையும் கைப்பற்றியுள்ளது. மேலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்பென்ஸர் ஜான்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Also Read: Funding To Save Test Cricket

இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் ஷதாப் கானின் சாதனையை சமன்செய்துள்ளார். முன்னதாக ஷதாப் கான் 107 விக்கெட்டுகளை கைப்பற்றி இப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்சமயம் ஹாரிஸ் ராவுஃபும் 107 விக்கெட்டுகளை வீழ்த்தி அவரது சாதனையை சமன்செய்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை