PAK vs NZ, 1st T20I: ஹாரிஸ் ராவூஃப் அபாரம்; நியூசிலாந்தை பந்தாடியது பாகிஸ்தான்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. லாகூரிலுள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் 8 ரன்களிலும், கேப்டன் பாபர் ஆசாம் 9 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆடம் மில்னே பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஃபகர் ஸமான் - சைம் அயூப் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சௌம் அயூப் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 47 ரன்களில் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாக, அடுத்து வந்த ஷதாப் கான் 5 ரன்களிலும், இஃப்திகார் அஹ்மத் முதல் பந்திலும் என அடுத்தடுத்து மேட் ஹென்றி பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் மறுப்பக்கம் அரைசதம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்த ஃபகர் ஸமான் 47 ரன்களை எடுத்திருந்த நிலையில் இஷ் சோதி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து இமாத் வாசீமின் விக்கெட்டை ஜிம்மி நீஷம் கைப்பற்றினார்.
அதன்பின் களமிறங்கிய ஷாஹீன் அஃப்ரிடியின் விக்கெட்டை மேட் ஹென்றி கைப்பற்றினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மேட் ஹென்றி தனது முதல் ஹாட்ரிக் விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார். அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 182 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும், ஆடம் மில்னே, பென் லிஸ்டர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதியடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் சாட் பௌஸ், வில் யங் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் டாம் லதாம் 20, டேரில் மிட்செல் 11, சாப்மேன் 34 (27), ஜேம்ஷ் நீஷம் 15 ஆகியோர் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்களை அடித்தனர். மற்றவர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டியதால், நியூசிலாந்து அணி 15.3 ஓவர்கள் முடிவில் 94/10 ரன்களை மட்டும் சேர்த்து.
பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹாரிஸ் ராவூஃப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதியடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று லாகூரில் நடைபெறுகிறது.