இங்கிலாந்து டி20 தொடரில் மீண்டும் பழைய ஃபார்மிற்கு திரும்புவேன் - ஹர்மன்பிரீத் கவுர்
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு மகளிர் அணிக்கெதிராக டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியை டிராவில் முடித்த இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை (ஜூலை 9) நார்த்ஹாம்டன் நகரில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே ஒருநாள் தொடரை இழந்துள்ள இந்திய அணி, டி20 தொடரையாவது கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் மீண்டும் எனது பழைய ஃபார்முக்கு திரும்புவேன் என இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "நான் தினமும் கடினமாக உழைத்து பயிற்சி பெற விரும்பும் ஒருவர். கரோனா தொற்று மற்றும் காயங்கள் காரணமாக, எனக்கு பயிற்சிக்கான நேரம் கிடைக்கவில்லை. ஆனால் இதனை ஒரு காரணமாக நான் கூற விரும்பவில்லை. ஏனென்றால் நான் களத்தில் அதிக நேரம் நின்று விளையாடக்கூடிய நபர்.
சர்வதேச மட்டத்தில், எங்களால் நேரடியாக வந்து எளிதாக ரன்களை எடுக்க முடியாது. ஐந்து இன்னிங்ஸ்களுக்குப் பிறகு நான் எங்கு முன்னேற வேண்டும் என்பதையும், எப்படி என்பதையும் புரிந்து கொண்டேன். எனவே இந்த டி20 தொடரில் எனது வேறுபட்ட அணுகுமுறையை நீங்கள் காண்பீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.