டி20 பயிற்சி ஆட்டம்: ஹர்ஷல் அரைசதம்; தினேஷ் கார்த்திக் அதிரடி - இந்திய அணி 149 ரன்கள் குவிப்பு!

Updated: Sun, Jul 03 2022 21:35 IST
Image Source: Google

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் ஜஸ்ப்ரீத் பும்ரா தலைமையிலான இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதற்கிடையில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான மற்றொரு அணி இங்கிலாந்து கவுண்டி அணிகளுடன் டி20 பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது. இதில் டெர்பிஷையருக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இன்று நார்த்தாம்டன்ஷையருக்கு எதிராக விளையாடி வருகிறது. 

நார்த்தாம்டனில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற நார்த்தாம்டன்ஷையர் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார்.

அவரைத் தொடர்ந்து 7 ரன்களில் ராகுல் த்ரிபாதியும், சூர்யகுமார் யாதவ் ரன் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தானர். இதனால் 8 ரன்களுக்கே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின் இஷான் கிஷானுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் வழக்கம்போல தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். இதற்கிடையில் 16 ரன்கள் எடுத்த இஷான் கிஷான் ஆட்டமிழக்க, 26 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 34 ரன்கள் சேர்த்திருந்த தினேஷ் கார்த்திக்கும் விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் - ஹர்ஷல் படேல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் 20 ரன்கள் எடுத்த வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய ஹர்ஷல் படேல் 34 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 36 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரிகள் என 54 ரன்களைச் சேர்த்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை