‘இன்னும் இரண்டு குழந்தைகள் பெற்று, அன்பை அனுபவிக்க வேண்டும்' - கோலிக்கு வார்னர் அறிவுரை!
நடப்பு ஐபிஎல் தொடரில், அனைத்து அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டி, தொடர்நது வெற்றிகளை குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதால், ஒவ்வொரு போட்டிகளும் அசத்தலாக சென்று கொண்டிருக்கிறது.
அதே போல, முந்தைய ஐபிஎல் தொடர்களில் இளம் வீரர்கள் ஜொலித்து வந்ததை போல, இந்த முறையும் பல இளம் வீரர்கள், கிரிக்கெட் உலகை தங்கள் பக்கம் திருப்பி உள்ளனர். ஆயுஷ் பதோனி, உம்ரான் மாலிக், சாய் சுதர்ஷன், அபிஷேக் ஷர்மா என பல வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பினை மிக கச்சிதமாக பயன்படுத்தி தங்கள் திறனையும் நிரூபித்து வருகின்றனர்.
ஆனால், அதே வேளையில் சில சீனியர் வீரர்கள் ஆட்டம், அதிக அளவில் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ள விராட் கோலி மற்றும் மும்பை அணியிலுள்ள ரோஹித் ஆகியோர், அடுத்தடுத்த போட்டிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்திருந்தனர். கடைசியாக, குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆடிய போது, 53 ரன்கள் அடித்து, தன்னுடைய முதல் அரை சதத்தை நடப்பு சீசனில் பதிவு செய்திருந்தார் கோலி. இருந்தாலும், தொடர்ச்சியாக அவர் ரன் அடிப்பாரா என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
அதே போல, இந்தாண்டு டி 20 உலக கோப்பைத் தொடருக்கு முன்பு, விராட் கோலி மற்றும் ரோஹித் ஆகியோர், பழைய ஃபார்முக்கு வர வேண்டும் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் டேவிட் வார்னரிடம், கோலிக்கு நீங்கள் கொடுக்கும் அறிவுரை என்ன என்பது பற்றிய கேள்வி, நிகழ்ச்சி ஒன்றில் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த வார்னர், "இன்னும் இரண்டு குழந்தைகள் பெற்று, அன்பை அனுபவிக்க வேண்டும்" என கூறிக் கொண்டே சிரித்தார். தொடர்ந்து பேசிய அவர், "இந்த கேள்விக்கு என்னால் நிச்சயம் பதில் சொல்ல முடியாது. நான் இப்படி ஃபார்ம் அவுட்டில் இருந்த போது, யாரும் என்னிடம் இப்படி கேட்கவில்லை. இருந்தும், கோலியை போன்ற நிலை, அனைத்து வீரர்களுக்கும் நடப்பது தான்.
நீங்கள் எத்தகைய சிறந்த வீரராக இருந்தாலும் பரவாயில்லை. எப்பொழுதும் நீங்கள் ஏற்ற இறக்கங்களை கொண்டிருக்க தான் போகிறீர்கள். சில சமயம், மீண்டும் நீங்கள் ஏற்றத்தினை நோக்கிச் செல்ல எதிர்பார்த்ததை விட நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளலாம்" என தெரிவித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தற்போது மோதி வருவது குறிப்பிடத்தக்கது.