உண்மை தெரியாமல் கற்பனையாக செய்தி வெளியிட வேண்டாம் : வேண்டுகோள் விடுத்த புவி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படாதது சமூக வலைதளங்களில் விவாதபொருளாக மாறியது.
இதையடுத்து சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்றில், புவனேஷ்குமார் டெஸ்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டு, டி20 கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது கடும் விமர்சனங்களைப் பெற்ற நிலையில், நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற போகிறேன் என்ற தகவல் உண்மை கிடையாது. பத்திரிகைகள் தேவையில்லாமல் இப்படி வதந்தி பரப்ப வேண்டாம் என புவனேஷ்வர் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து புவனேஷ்வர் குமார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,“நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளேன் என ஒரு பத்திரிகை எழுதியுள்ளது. நான் மூன்றுவகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து பங்கேற்க விரும்புகிறேன் என்பதை தற்போது உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். உண்மை என்னவென்று தெரியாமல், கற்பனையாக செய்தி வெளியிட வேண்டாம்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழும் புவனேஷ்வர் குமார் கடைசியாக, 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றார். அதன்பிறகு, டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் ஐபிஎல் 13ஆவது சீசனில் இவருக்குக் காயம் ஏற்பட்டது.
இதனால், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இவரின் பெயர் இடம்பெறவில்லை. காயத்திலிருந்து குணமடைந்த பிறகு இங்கிலாந்துக்கு எதிராக டி20, ஒருநாள் தொடர்களில் புவனேஷ்வர் குமார் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.