‘உங்களை இந்த ஜெர்சியில் பார்த்ததே இல்லை அப்பா’ அஸ்வின் குறித்து அவரது மகள்!
தோனி தலைமையிலான இந்திய அணியின் பிரதான ஸ்பின்னராக திகழ்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், கோலி கேப்டன் பொறுப்பேற்ற பின்னர் ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலிருந்து நீக்கப்பட்டார். 2017ஆம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆடவில்லை.
ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் ஆஃப் ஸ்பின்னரான அஸ்வினுக்கு அணியில் இடம் கிடைக்காமல் இருந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசி உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களையும் திணறடித்ததன் விளைவாக, டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார் அஸ்வின்.
அஸ்வினின் அனுபவமும் திறமையும் தான் அவர் மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பிடிக்க காரணம் என்றும், ஐபிஎல்லில் கடந்த 2 சீசன்களாக அருமையாக பந்துவீசி உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் பலரையும் திணறடித்ததால் தான் அவர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டதாகவும் கேப்டன் விராட் கோலி தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ள அஷ்வின், டி20 உலக கோப்பைக்கான இந்திய ஜெர்சியை அணிந்தார். ப்ளூ ஜெர்சியில் தனது தந்தையை கண்ட அஸ்வினின் மகள், “அப்பா.. இதுவரை உங்களை நான் இந்த ஜெர்சியில் பார்த்ததில்லை அப்பா” என்று கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
மகள் கூறியதை கேட்டு நெகிழ்ச்சியடைந்த அஷ்வின், தனது மகள் கூறியதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, இந்திய ஜெர்சி அணிந்து தனது மகளுடன் நிற்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.