SLW vs WIW, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி விண்டீஸ் அபார வெற்றி!

Updated: Wed, Jun 26 2024 16:24 IST
Image Source: Google

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை இலங்கை மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று முன்னிலைப் பெற்றது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று ஹம்பந்தொட்டையில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு விஷ்மி குணரத்னே - சமாரி அத்தபத்து இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அத்தபத்து 26 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 24 ரன்களைச் சேர்த்திருந்த விஷ்மி குணரத்னேவும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

அதன்பின் களமிறங்கிய துலானி 6 ரன்களுக்கும், ஹர்ஷிதா மாதவி 14 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, இலங்கை அணி 15.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்களை எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. இதனால் மீண்டும் தொடங்கிய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 15 ஓவர்களில் 99 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் - ஸ்டாஃபானி டெய்லர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் மேத்யூஸ் 29 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய காம்பெல் 16 ரன்களுக்கும், ஜோசப் 6 ரன்காளிலும் என விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டெய்லர் 28 ரன்களைச் செர்த்தார். 

அவருக்கு துணையாக அலியாவும் 15 ரன்களைச் சேர்க்க வெஸ்ட் இண்டீஸ் அணியானது 14.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணியானது 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை