சதமடித்து மகளிர் டி20 கிரிக்கெட்டில் சாதனைகள் படைத்த ஹீலி மேத்யூஸ்!

Updated: Thu, May 22 2025 15:53 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது கேன்டர்பரியில் நேற்று நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியில் கேப்டன் ஹீலி மேத்யூஸ் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 100 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களைச் சேர்த்தது.

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சோஃபியா டங்க்லி 12 பவுண்டரிகளுடன் 81 ரன்களையும், ஹீதர் நைட் 6 பவுண்டரிகளுடன் 43 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 16.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியைத் தழுவிய நிலையிலும் சதமடித்து அசத்திய ஹீலி மேத்யூஸ் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி, மகளிர் டி20 சர்வதேசப் போட்டியில் முழு உறுப்பினர் நாடுகளுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீராங்கனை எனும் சாதனையை ஹீலி மேத்யூஸ் வைத்திருக்கிறார். முழு உறுப்பினர் நாடுகளுக்கு எதிராக இது அவரது மூன்றாவது சதமாகும். 

முழு உறுப்பினர் நாடுகளுக்கு எதிராக அதிக டி20 சதங்கள்

  • ஆடவர் டி20: ரோஹித் சர்மா, மேக்ஸ்வெல் - 5
  • மகளிர் டி20: ஹேலி மேத்யூஸ் – 3* 

இதுதவிர்த்து மகளிர் டி20 சர்வதேசப் போட்டியில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை அடித்த நான்காவது வீராங்கனை என்ற பெருமையை ஹீலி மேத்யூஸ் பெற்றுள்ளார். இதாற்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இஷா ஓசா, இலங்கை அணியின் சமாரி அத்தபத்து மற்றும் தான்சானிய வீராங்கனை ஃபாதுமா கிபாசு ஆகியோர் மட்டுமே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை அடித்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

மகளிர் டி20 போட்டிகளில் அதிக சதங்கள்:

  • 4 (93 இன்னிங்ஸ்) - இஷா ஓசா
  • 3 (143 இன்னிங்ஸ்) - சாமரி அதபத்து
  • 3 (44 இன்னிங்ஸ்) - பாத்திமா கிபாசு
  • 3* (107 இன்னிங்ஸ்) - ஹேலி மேத்யூஸ்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை