ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஹர்‌ஷல் படேல் தகுதியானவர் - சுனில் கவாஸ்கர்!

Updated: Thu, Feb 17 2022 11:31 IST
Image Source: Google

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் 10 அணிகளும் சேர்த்து 204 வீரர்களை ஏலத்தில் எடுத்தது. இதில் 67 பேர் வெளிநாட்டு வீரர்கள்.

ஐபிஎல் ஏலத்தில் டாப்-3 பட்டியலில் இந்தியர்களே இடம்பெற்று இருந்தனர். இஷான் கி‌ஷன் (மும்பை) ரூ.15.25 கோடிக்கும், தீபக் சாஹர் (சென்னை) ரூ.14 கோடிக்கும், ஸ்ரேயாஸ் அய்யர் (கொல்கத்தா) ரூ.12.25 கோடிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

அதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்தை சேர்ந்த லிவிங்ஸ்டோன் (பஞ்சாப்) ரூ.11.5 கோடிக்கு விலை போனார். அதற்கு அடுத்த 4 பேரில் இருவர் இந்தியர்கள். ஹர்‌ஷல் படேல், ‌ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா ரூ.10.75 கோடிக்கு ஏலம் போனார்கள்.

வேகப்பந்து வீரரான ஹர்‌ஷல் படேல் கடந்த ஐபிஎல் சீசனில் பெங்களூர் அணிக்காக விளையாடி 32 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். கடந்த முறை அவருக்கான ஊதியம் ரூ.20 லட்சமாக இருந்தது. தற்போது ஹர்‌ஷல் படேலை பெங்களூர் அணி அதிகமான தொகை கொடுத்து ஏலத்தில் தக்கவைத்துக் கொண்டது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேற்றைய முதல் 20 ஓவர் போட்டியில் அவர் 2 விக்கெட் கைப்பற்றினார்.

இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஹர்‌ஷல் படேல் தகுதியானவர் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “கடந்த ஆண்டு ஹர்‌ஷல் படேல் ஐபிஎல் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஏலத்தில் சம்பாதித்த ஒவ்வொரு ரூபாய்க்கும் அவர் தகுதியானவர். ஹர்‌ஷல் படேலின் சிறப்பு அம்சம் ஒவ்வொரு முறையும் தன்னை புதுப்பித்து கொள்கிறார்.

பந்துவீச்சில் நிறைய வி‌ஷயங்களை கற்றுள்ளார். அதில் இருந்து அவர் மேம்பட்டுள்ளார். பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் விடும் வகையில் பந்து வீசுகிறார்.

அவர் யார்க்கர் பந்தை சிறப்பாக வீசுகிறார். மேலும் மெதுவாக பவுன்சர் வீசுகிறார். கடந்த ஐபிஎல் தொடரில் கிடைத்த அனுபவம் அவருக்கு நன்றாக கைகொடுக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை