இந்த அரைசதத்தை ரோஹித் சர்மாவின் மகளுக்கு அர்ப்பணிக்கிறேன் - திலக் வர்மா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான 20 வயதேயாகும் திலக் வர்மா, 2 சிக்சர்களுடன் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடிய திலக் வர்மா, 22 பந்துகளில் 39 ரன்கள் விளாசி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் பிரஷரான சூழலில் விளையாடி 39 பந்துகளில் அரைசதம் அடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் திலக் வர்மா அடிக்கும் முதல் அரைசதம் இதுவாகும். இந்த அரைசதத்தை வித்தியாசமான முறையில் இரு கட்டை விரல்களையும் மாற்றி மாற்றி காண்பித்து குழந்தையை போல் கொண்டாடினார்.
இதனால் திலக் வர்மாவின் கொண்டாட்டம் யாரை பிரபலக்கிறது என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பினர். இந்த நிலையில் போட்டிக்கு பின் திலக் வர்மா பேசுகையில், “இந்த அரைசதத்தை ரோஹித் சர்மா சாரின் மகள் சமைராவுக்கு அர்ப்பணிக்கிறேன். அதற்காக தான் அப்படியொரு கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினேன். நாங்கள் இருவரும் அதிக நேரம் ஒன்றாக விளையாடி இருக்கிறோம்.
அதனால் நான் எப்போது என் முதல் அரைசதம் மற்றும் சதத்தை விளாசிகிறோனோ, அப்போது சமைராவுக்கு அர்ப்பணிப்பதாக சொல்லி இருந்தேன். நாங்கள் அப்படி விளையாடுவோம் என்பதால், அப்படியொரு கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினேன். அதேபோல் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ரோஹித் மற்றும் ரெய்னா இருவருமே எனக்கு ரோல் மாடல்.
ஐபிஎல் தொடரின் முதல் சீசனின் போதே ரோஹித் சர்மாவுடன் அதிக நேரம் செலவிட்டிருக்கிறேன். அப்போதே ரோஹித் சர்மா என்னிடம், நீ மூன்று வடிவத்திற்குமான வீரர் என்று நம்பிக்கை கொடுப்பார். அவரது வார்த்தைகள் களத்தில் எனக்கு கூடுதல் வழிகாட்டியாக அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.