இந்திய டெஸ்ட் அணிக்கு ஏற்ற வீரர் இவர்தான் - டேனீஷ் கனேரியா
இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை வெற்றிகரமாக முடித்துவிட்டு அடுத்ததாக தென் ஆப்பிரிக்க தொடருக்காக தயாராகி வருகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெரிய வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருந்தாலும் மிடில் ஆர்டரில் சீனியர் வீரர்களின் செயல்பாடு சற்று வருத்தம் அளிப்பதாகவே இருந்தது.
குறிப்பாக விராட் கோலி, புஜாரா, ரஹானே ஆகியோரது பார்ம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதன் காரணமாக தென் ஆப்ரிக்க தொடரில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அணியில் ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், அகர்வால் போன்ற வீரர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட வயது முதிர்ந்த வீரர்கள் என்றே கூறலாம்.
இந்நிலையில் இந்திய அணியில் 19 வயதான யாஷஸ்வி ஜெய்ஷ்வாலை டெஸ்ட் போட்டிகளில் சேர்க்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான டேனிஷ் கனேரியா தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணியில் சூரியகுமார் யாதவை தற்போது தேர்ந்தெடுத்து டெஸ்ட் அணியில் வெளியே தான் அமர வைத்து வருகின்றனர். அதே வேளையில் ஜெய்ஷ்வாலை அணியில் எடுப்பது தவறு இல்லை.
ஏனெனில் தற்போது தான் அவருக்கு 19 வயது ஆகிறது. மேலும் அவரை நான் அண்டர் 19 அணியில் விளையாடும் பருவத்தில் இருந்தே பார்த்து வருகிறேன். அவரது ஆட்டம் மிக சிறப்பாக இருக்கிறது. ஐபிஎல் தொடரிலும் அவர் தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். என்னை பொருத்தவரை டெஸ்ட் அணிக்கு ஏற்ற பிளேயர் அவர் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
ஏனெனில் அவரால் நிச்சயம் டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாட முடியும். இளம் வீரர் என்பதால் அவரால் இந்திய அணிக்காக தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.