அர்ஷ்தீப் சிங் அடிப்படையில் தெளிவாக இருக்க வேண்டும் - கௌதம் கம்பீர்!

Updated: Tue, Jan 31 2023 13:02 IST
Image Source: Google

சர்வதேச போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டம் மூலம் அறிமுகமான சில மாதங்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்தவர் அர்ஷ்தீப் சிங். ஆங்காங்கே ஒரு தவறுகள் செய்திருந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் மற்றும் ரன்களை கட்டுப்படுத்தும் விதத்திலும் நன்றாக செயல்பட்டு இருக்கிறார்.

ஆனால் டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இவரது செயல்பாடு கேள்விக்குறியாக மாறியுள்ளது. அதிக நோ-பால்கள் வீசுகிறார். ஒய்டுகள் அதிகமாக வீசுகிறார். டெத் ஓவர்களில் ரன்களை வாரிக்கொடுகிறார். இலங்கை அணியுடன் நடந்த டி20 போட்டியின் போது ஒரே போட்டியில் ஐந்து நோ-பால்கள் வீசி மோசமான சாதனையை படைத்தார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் கடைசி ஓவரில் நோ-பால் உட்பட 27 ரன்கள் வாரிக்கொடுத்தார்.

இவை இரண்டும் மிகப்பெரிய பின்னடைவை இந்திய அணிக்கு தந்து தோல்விக்கும் ஒரு காரணமாக மாறியது. இந்நிலையில் அர்ஷ்தீப் பந்துவீச்சு மற்றும் அவரது முனைப்பு குறித்து கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நோ-பால்கள் வீசுவது ஏற்றுக் கொள்ளவே முடியாதது. டி20 போட்டிகளில் அதிக ரன்கள் கொடுக்கிறோம், குறைந்த ரன்களை கொடுக்கிறோம் என்பது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மைதானத்தை பொருத்து மாறும். அதில் எந்தவித விமர்சனத்தையும் வைக்க முடியாது.

ஆனால் நோ பால்கள் கொடுப்பதை கட்டாயம் பொறுத்துக்கொள்ள முடியாது. அது பவுலரையும் அணியையும் சேர்ந்து பாதிக்கும். முதல் போட்டியில் அதுதான் நடந்திருக்கிறது. அதேபோல் இரண்டாவது போட்டியில் தனது தவறை சரி செய்து கொண்டு நன்றாக கட்டுப்படுத்தி பந்து வீசினார். இதையும் நாம் பாராட்ட வேண்டும்.

அர்ஷ்திப் சிங் இந்திய மைதானங்களுக்கு இன்னும் பழகவில்லை என்று வெளிப்படையாக காட்டுகிறது. இந்திய மைதானங்களில் அதிக அளவில் பந்து பவுன்ஸ் ஆகாது. ஆஸ்திரேலியா மைதானங்களைப் போல ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆகாது. அதற்கேற்றார் போல தகவமைத்துக்கொண்டு பந்துவீச வேண்டும்.

உம்ரான் மாலிக் போல அதிக வேகமும் இல்லை. ஆகையால் டெத் ஓவர்களில் வேகத்தை வைத்து பேட்ஸ்மேன்களை திணறடிக்கிறேன் என வீண் முயற்சிகளில் ஈடுபடக்கூடாது. அங்கு தவறு நடக்கிறது என்று தெளிவாக தெரிந்து விட்டது. அதேபோல் முகமது சிராஜ் போல நிறைய டெக்னிக் இல்லை. ஆகையால் சர்வதேச போட்டிகளில் தனக்கு என்ன அடிப்படையில் வரும் என்பதை உணர்ந்து அதில் திறம்பட செயல்பட வேண்டும். பயிற்சி போட்டிகளின் போது வித்தியாசமான டெக்னிக் முயற்சித்து பழக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை